மங்கள நாளுக்காக

முகிலே உன்
முகப்பரு ஒன்று
முட்டித் தெறித்த
முல்லைக் காட்டு
மழைத்துளி போல்
சிதறிப் போனேன் உன்
முதல் பார்வையில்..!!
உன் விரல் நகம் கிழித்த
என் சதை ஓவியம் விலை
கேட்டு வீட்டு வாசல் நிரம்பி
வழியும் கூட்டம் கலைக்க
வழி சொல்..
உன் காந்தக் கால்களை
நெருங்கத் தொடரும்
என் இரும்புக் கால்களை
ஓய்வெடுக்கச் சொல்..
சிரிக்காதே சகியே
சிவக்கிறேன் நான்
சிணுங்காதே சிலையே
சிலிர்க்கிறேன் நான்..!!
உன் கன்னக்குழியை
முத்தமிட்டே நிரப்பும்
என் பகல்கள்..!!
உன் நெஞ்சுக்குழியை
யுத்தமிட்டே நிரப்பும்
என் இரவுகள்..!!
என் கண்ணீருக்கு
தடை போடுகின்றேன்
உன் நினைவோடு..!!
என் தனிமைகளில்
நடை போடுகின்றேன்
உன் நிழலோடு..!!
தூரத்தில் துள்ளி ஓடும்
தூரலே..
காதோரத்தில் கிள்ளி ஓடும்
சாரலே..
காதலோடு காத்துக் கிடக்கின்றேன்
மஞ்சள் கிழங்கினை உன்
மார்போடு கிடக்கச் செய்யுமந்த
மங்கள நாளுக்காக...
செ.மணி