இதய மின்சாரம்
யாருக்கும் அனுமதியில்லை என்று
எல்லா கதவுகளையும் சாத்திவைத்தேன்
எப்படி நுழைந்தாய் இதயத்தில்.
தாமரை மொட்டென இதயம்
ஆயிரம் இதழ்கள்
அரும்பிப் பொலிந்தன அன்பால்.
ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிள் அறைகள்
வலதும் இடதுமாய்
இதயக் குருதியைப்
பரிமாறிக்கொள்வது போல்
நம் இதயம் மாறிப் புக்கின.
கையளவுதான் உன் இதயம்
ஆழமும் அகலமும்
மகா சமுத்திரத்தின் விஸ்வரூபம்.
இதய சிம்மாசனத்தில் வீற்றிடுவேன் என்றாய்
இம்மி அணுவும் மிச்சமின்றி
இதயமெங்கும் பட்டாம்பூச்சியாய் படபடக்கிறாய்.
அனல் மின்சாரம் அணு மின்சாரம்
புனல் மின்சாரம் அனைவர்க்கும் தெரியும்
உன் இதய மின்சாரம்
நான் மட்டும் அறிவேன்.
எந்தப் பூவால் வெல்லக்கூடும்
இதயப் பொலிவால்
மலரும் புன்னகைப் பூவை.
வாழ்த்துக்கும் உறவுக்கும்
ஈர இதயங்கள் மட்டுமே
வரம் பெற்றவை
உலர்ந்த இதயங்கள் ஓய்வெடுக்கும்.
இதயம் மிகவும் கணத்து கிடந்தது
இதமாகி உன்னால்
இலகுவாய் பறக்கிறது.