எட்டயபுரத்து எரிமலை

எங்கள் தமிழ்க் கவிஞர்கள்
சமூகத்தின் புண்ணுக்கு புணுகு தடவி
பொன்னாடை இட்டு
போர்த்தி வைத்திருந்த நாட்களில்
சுட்டு விரல் நெருப்பால்
சூடு போட்டவன் நீ . .

நீ பொட்டு வைத்திருந்தாயா இல்லையா . . என்று
பட்டிமன்றப் பண்டிதர்கள் இன்னும்
விவாதித்துக் கொண்டிருகிறார்கள்.
நெருப்பைத் தானே நீ
நெற்றியில் வத்தாய் . . அது
குங்குமமாகக் குளிர்ந்து போனது.!

ஜாதி வெறி பிடித்த
மனித விலங்குகளைப் பார்த்து
சூரியக் கதிரினும் வீரியமான உன் விழிகளின்
ஜெல்லட்டின் பார்வைகள்
பற்றிக்கொண்டு படபடத்தன.

ஏகாதிபத்திய முகங்களில்
அக்கினிக் குழம்பைத் துப்பிய
எட்டயபுரத்து எரிமலையே.

உன் மனசாட்சிகூட
அக்கினி அனலாய் அடர்ந்து எரிந்ததால்
அநியாங்களுக்கு எல்லாம்
ஆபத்து வந்தது.

சொர்க்கதப் போதித்துக்கொண்டு
மண்ணை நரகமாக்கிவரும்
மதப் பேய்களை ஓட்டிட
பாஸ்பரஸ் நெருப்புப்
பாதங்களால் உதைத்தாய்.

உன் இடது கால் சிறு விரலில் ஒட்டியிருந்த
தூசுக்கு இருந்த சூடுகூட
எங்கள் கம்ப்யூட்டர் மூளைகளுக்கும்
வர மறுக்கிறது.

அக்கனி அமிலத்தை மையாக்கி எழுதிய
அவதார புருஷன் நீ,
நாங்கள் கோடம்பாக்கத்துப் பேனாவில்
கூவத்தை மையாக்கி எழுதிவருகிறோம்.

மாதரை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்தச் சொன்னாய்.
வீணைகளும் இங்கே விறகாகி விட்டன,
தந்தூரி அடுப்புகளிலும் தகனம் நடக்கிறது.
நீதி தேவதையே தன்
நிலை எண்ணித் தவிக்கிறாள்.

இலக்கியப் புரட்சிக்கு
இலவச நெருப்பு தந்தாய்,
அதை எடுத்து
சாராய அடுப்புகளின்
சருகுகளைப் பற்றவைத்தோம்.

உன் தன்னடக்கம் அதிசயிக்க வைக்கிறது
உந்தன் உயரத்துக்கு
எந்த தமிழனும் வரமுடியாது என்பதற்காகவே
அக்கினியின் குஞ்சாக
அடையாளப் படுத்திக் கொண்டாயோ.

இந்திய தேவியை
அடமானம் வைத்திட்ட பாதகர் கரங்களை
எரித்திடச் சொன்னாய்.

எம் விரல்களில்
கரும்புள்ளிகளை இட்டுக் கொண்டு
பெரும் புள்ளிகளைத்தான் உருவாக்கி வருகிறோம்.
உயர்வான தலைவராய்
ஒருவரையும் கோணோம்.

எப்படிப் பார்த்தாலும் நீ
நெருப்பாகவே நிமிர்ந்து நிற்கிறாய்
எவராலும் உன்னை நெருங்க முடியாது.

நீ மறைந்து தொண்ணூற்றி இரண்டு
ஆண்டுகள் பறந்து போயின.
உன் நினைவின் நூற்றாண்டு விழாவுக்கு
என்ன பரிசு எம்மால் தரமுடியும்
என்று நினைத்துப் பார்க்கிறேன்..

சாதி மதக் கலவரங்களில்
எரிந்த சாம்பலின் மிச்சத்தையே
தரமுடியும் என்பதாய்த்தான்
தேசத்தின் பாதையும் பார்வையும்
தென்படுகிறது.

எழுதியவர் : எழில்வேந்தன் (7-Aug-15, 12:41 pm)
சேர்த்தது : எழில்வேந்தன்
பார்வை : 625

மேலே