பகுத்தறிவுத் தந்தையுடன் பாமரக் கவிஞன்

அய்யா, நீங்கள்
அக்கினிக் குஞ்சுகளை
அடைகாத்த சூரியன்
நாங்களோ
மின்மினிகளுக்காக ராத்திரியானவர்கள்.

நீங்கள் பேசத் தொடங்கினீர்கள்
ஆயிரம் வால்ட் பல்புகளாய்
இதயங்கள் எல்லாம் பிரகாசமடைந்தன.
நாங்கள் ஆயிரம்
பல்புகள் எரிந்தால்தான்
பேசவே வருகிறோம்.

நீங்கள் தமிழ்க் குடும்பத்தின்
தந்தையாய் இருந்தீர்கள்
நாங்கள்
அவரவர் குடும்பத்தின்
அப்பாவை இருப்பதிலேயே
அக்கறையாய் இருக்கிறோம்.

நீங்கள்
கூட்டத்துக்கு வருகிற தலைகளை
கணக்கெடுத்துக் கொண்டிருக்காமல்
சிங்கமாய் முழங்கி செம்மாந்து நடந்தீர்கள்.

நாங்கள்
வாக்குகளின் எண்ணிக்கையைக்
கணக்கிட்டுக் கொண்டுதான்
வார்த்தைகளை உதிர்க்கிறோம்.

நீங்கள் உடன்பாடில்லாதவற்றை
உதட்டளவில் பேசவும்
ஒப்பியதேயில்லை.
நாங்கள் உடன்பாடானவற்றைக் கூட
உள்ளார்ந்த மனத்துடன்
செப்புவதில்லை.

நீங்கள்
அப்பாவியான அழுக்கு மனிதர்களைச்
சலவை செய்தீர்கள்.
அவர்களை
எங்கள் சலவை மனிதர்கள் மீண்டும்
அழுக்காக்கி விட்டார்கள்.

உமது சொற்பொழிவுகள்
விவாதங்களுக்கு விதைகளாயின.
எமது விவாதங்களோ
கைத்தட்டல்களோடு கரைந்து விடுகின்றன.

நீங்கள்
ஏழை அத்தைக்கு
வளர்ப்பு மகன் ஆனீர்கள்.
நாங்களோ
பணக்காரப் பாப்பக்களுக்கே
வளர்ப்பு மகனாகும்
வாய்ப்பைத் தேடுகிறோம்.

நீங்கள்
ஆடம்பரத்தை அறவே வெறுத்தீர்கள்.
நாங்கள்
ஆடம்பரத்துக்காக அனைத்தையும் இழக்கக்
காத்துக் கிடக்கிறோம்.

தோள்களில் விழும்
பொன்னாடைகளுக்காக
இடுப்பு வேட்டிகளை அடகு வைத்துவிட்டுத்
தலை குனிகிறோம்.
முதல் மரியாதைகளின் முக்கியத்துவத்தில்
சுயமரியாதைகளைச்
சுக்கல் நூறாக்குக்கிறோம்.

நீங்கள்
கால்களால் செல்வத்தை உதறிவிட்டு
இதயத்தால் மக்களை நேசித்தீர்கள்.
நாங்கள்
இதயத்தால் செல்வத்தை நேசித்து
கால்களால் மக்களை உதைக்கிறோம்.

நீங்கள்
உம்மையே
சமூகத்துக்கு அர்ப்பணம் செய்துவிட்டு
வேறு எதை அர்ப்பணிக்கலாம்
எனத் தேடினீர்கள்.
நாங்கள்
சமூகத்தையே எமக்காகச்
சமர்ப்பிக்கலாகாதா என்று
சந்தர்ப்பம் தேடுகிறோம்.

நீங்கள்
கடவுள் பக்தர்களின்
பிள்ளையாய்ப் பிறந்து
தமிழினத்தின் தலையை
நிமிரச் செய்தீர்கள்.
நாங்கள்
உங்கள் தொண்டர்களின்
பிள்ளைகளாய்ப் பிறந்திருந்தும்
உலகத்தின் முன்னே
தலைகுனிந்து கிடக்கிறோம்.

உமது சிந்தனை
நடிகர்களையும் நாத்திகர்களாக்கியது.
இன்றோ
நாத்திகர்களும் நடிகர்களாகி விட்டார்கள்.

நீங்கள்
சாதிப் பெயர்களைச்
சாக்கடைக்கு வீசினீர்கள்.
நாங்கள் அந்தச்
சாக்கடையை எடுத்து
சந்தனமாய்ப் பூசிக்கொள்கிறோம்.

சாதி ஒழிந்ததாய்
ஊருக்குச் சொல்கிறோம்..
ஆனால் அது
ஒவ்வொரு மனதிலும்
ஒளிந்து கொண்டிருப்பதைத்தான்
ஊர்கள் தோறும்
ஊர்ஜிதப் படுத்துகிறோம்.

நாங்கள்
சமதானமாய் போகிறோம்-
சகோதரர்களோடு அல்ல.
சண்டை போடுகிறோம்
விரோதிகளோடு அல்ல.

உமது கொள்கைகள்
உங்களை அறிமுகம் செய்தன.
எங்களுக்கு
அரிதார முகம்தான் அவசியமாகிவிட்டது.
கொள்கை முகம் எத்தனைக்
கோணலாய் இருந்தாலும்
கோடம்பாக்க முகங்களே
கொண்டாடப் படுகின்றன.

நீங்கள்
நரைகூடிக் கிழப்பருவம்
எய்திய பின்னரும்
இளைஞனாகவே பவனி வந்தீர்கள்.
நாங்கள்
முடிச்சாயம் இல்லாமல்
முகம்காட்டுவதே இல்லை.

நீங்கள்
சிக்கனத்தைக் கடைப்பிடித்தீர்கள்.
நாங்களும்
சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிறோம்.
ஆமாம்.
பயன்படுத்துவதேயில்லை
பகுத்தறிவு
எங்களிடம் பத்திரமாக இருக்கிறது.

எழுதியவர் : எழில்வேந்தன் (7-Aug-15, 12:39 pm)
பார்வை : 786

மேலே