மருத்துவ உலகின் மகத்துவச் சாதனை
அடிமை இருளின் அடர்த்தியோடு
அறியாமை இருளிலும்
அமிழ்ந்து கிடந்த இந்திய தேசம்
விடுதலை விடியலில் கண்விழித்தபோது
கணக்கற்ற பணிகள் காத்துக்கிடந்தன.
குவிந்து கிடந்த குப்பையைப் பெருக்கி
கோலம் போட்டதும்
அவசியப் பணிகள் ஆரம்பமாயின.
மூடத்தனத்தின் முரட்டுப் போர்வைகள்
மூடிவளர்த்த நோய்களும் பிணிகளும்
பலிகொண்ட உயிர்களின் பட்டியல் பெரிது.
பிள்ளை நிலாக் கனவுகளோடு
இரவு பகலாய் முந்நூறு நாட்கள்
வயிற்றிலிருந்து இறக்கி வைக்காமல்
சிலுவை சுமக்கிறார்கள் பெண்கள்.
பிரசவம் என்கிற அக்கினிக் குண்டத்தில்
தப்பிப் பிழைத்தத்
தாய்மார்கள் பேறு பெற்றவர்கள்தாம்.
வாரிசுக்காகவும் வம்சத்துக்காகவும்
குழந்தைகளைப் பெற்றுக்
குவித்துக் கொண்ட
பாமர ஜனங்கள் நிரம்பிய
பழைய இந்தியா.
ஒன்றோ இரண்டோ . . .
அதற்குமேல் இறைவனே கொடுத்தாலும்
எடுத்துக்கொள்ள விரும்பாத
புதிய இந்தியாவின்
புதுமைத் தாய் தந்தையர்கள்.
ஜனன நேரத்தை
இறைவன் குறித்திட்ட நிலைமை மாறி
அறுவைக் கூடத்தின் கால அட்டவணைப்படி
மருத்துவ பிரம்மாக்கள் மாற்றி எழுதினால்
மறுத்துப் பேசிட
மகேசனுக்கே மார்க்கம் இல்லை.
மருத்துவச் சாதனைகள்
புரிந்த மகத்துவத்தால்
இன்று
மனிதனின் இனிய வாழ்க்கையில்
இறப்பு என்பது
மூப்புக்குப் பின்னால்
நேரும் விபத்து என்று ஆனது.
நாளைய பாரதத்தில்
நமது குழந்தைகள் மூப்பைக்கூட
தவணை முறையில் தள்ளிப்போடும்
தனி மருத்துவத்தில் தங்கங்களாவார்கள்.