காற்றில் வழிகிறது கவிதை

அகிலத்தில் அவதரித்த அக்கணமே உச்சி முகர்ந்து
முதலில் ஸ்பரிசித்தது நீதான், காற்றே
அன்னையின் முத்தம்கூட அதன்பின்தான்.

இந்தப் பிரபஞ்சத்தின் உருவாக்கமே
உனக்குப் பின்னர்தான்.

பிரபஞ்சத்தில் முதன்மையாய்
முன்தோன்றி இருந்தாலும்
இன்னும் இளமையாய் புதுமையாய்
சுற்றிச் சுழல்கிறாய்.

உன் சலனங்கள் இன்றேல் ஏதுமில்லை
இலைகளில் எந்த சலசலப்புமின்றி
மொக்குகள் முகிழ்க்காமல்
மகரந்தங்கள் உறைந்து காத்திருக்கும்.

எங்கிருந்து வருகிறாய்
இதயம் எங்கும் தழுவுகிறாய்
மயிர்க்கால்கள் எல்லாம் சிலிர்க்க வைக்கிறாய்.

உன்னைத் தழுவத் துடிக்கிறேன்
இரண்டு கரங்கள் எப்படிப் போதும்
ஆயிரம் கைகள் இருந்தாலும் இயலுமோ.

என்னில் வியாபித்திருக்கும் உயிர்க்காற்றே
உன்னை அன்றி எதுவும் ஒப்பாது
நீ இன்றி உயிர் தப்பாது.

நீரின்றி அமையாது உலகு
நீர் மட்டும் அல்ல
நீயின்றி அமையாது எதுவும்.

திசைகள் எல்லாம் தெரிந்திருந்தாலும்
தீர்மானிப்பது நீதான் ,
சேருமிடம் எது என்பதை.

இலைகள் மலர்கள் அலைகள் மட்டுமல்ல
ஒவ்வொரு அசைவிலும்
உன்னை உணர்கிறேன்.

எல்லாவற்றுக்குக்கும்
மறுபக்கமோ பரிமாணங்களோ உண்டு
நிழல் இல்லாத நிஜம் நீதான்.

வெற்றிடமாய் எங்கும் எதனையும்
வெறுமையில் விட்டு விடுவதில்லை
இட்டு நிரப்புகிறாய், எப்போதும்.

நீ என்னை மெல்ல வருடும்பொழுது
என் தோள்களில்
சிறகுகள் முளைப்பதுபோல் குறுகுறுக்கின்றன .

உன் சலனங்கள் இன்றேல் ஏதுமில்லை
இலைகளில் எந்த சலசலப்புமின்றி
மொக்குகள் முகிழ்க்காமல்
மகரந்தங்கள் உறைந்து காத்திருக்கும்.

காலைக் காற்றாக வருகிறாய்
என் காது மடல்களை மெல்ல ஸ்பரிசித்து
இமைகளை முத்தமிட்டு
விழிமலர்த்தி உயிர்த்தெழச் செய்கிறாய்.

கற்றது கைமண் அளவுதான்
காற்றின் வழி பெற்றதே பெரிதும்
காற்றில் வழிகிறது கவிதை.

எழுதியவர் : எழில்வேந்தன் (7-Aug-15, 12:50 pm)
பார்வை : 329

மேலே