வாழ்க்கை

இந்த வாழ்க்கை
எப்படி இருப்பினும்
நிச்சயம்
மோசமானது என்று
சொல்லிவிட முடியாது.

வாழ்க்கையில்
வடிகால் எதுவுமே
தென்படவில்லை என்பதற்காக
வருந்துவதில்
என்ன வந்துவிடப் போகிறது.

நூலைப் பற்றிய உன் கருத்து
பாராட்டுதல்களால்
நிரம்பி இருந்தாலும்
நூல் என்னவோ
படிக்கப்படாமலேயே இருக்கிறது.

நீ என்னை அழைப்பது போல்
நான் ஒரு நண்பண் என்றால்
பின்
குறைகள் எதையும்
கண்டு கொள்ளக் கூடாது.

சின்னஞ் சிறு கூறுகளாகிச் சிதறி
இற்றுப் போகக்கூடியதொரு நட்பு
எனக்கு ஏற்புடையது அல்ல.

கணக்கற்ற கடவுள்களில் எதுவும்
நான் காணக் கிடைக்காததால்
பெரும் சோர்வுற்று இருக்கிறேன்.

உண்மைக் கடவுளின் தரிசனம்
ஒருபோதும்
எனக்குக் கிடைத்தத்ில்லை.

எத்தனைப் பொய் முகங்கள்
எத்தனை முகமூடிகள்
எல்லா முகங்களும்
அணிந்திருக்கின்றன.

முகமூடிகள் மட்டுமே எஞ்சியிருக்க
மனிதர்கள் எல்லாம்
தொலைந்து போனார்கள்.

வார்த்தைகள்
உன்னைக் காயப்படுத்தகூடும் . .
எனவே
என் வார்த்தைகளை
அவ்வளவாக பொருட்படுத்த வேண்டாம்.

ஆனால் உள்ளார்ந்த நோக்கங்களில்
தவறேதும் இல்லை என்பதை
உணர்ந்தால் போதும்.

உடன் வாழும்
மனிதர்களின் உள்ளன்பில்
ஆழம் ஏதும் இல்லாத போது
எங்கோ இருக்கும் இறைவனிடம்
இரக்கத்தை
எப்படி எதிர்பார்க்க முடியும்.

பருவநிலைச் சூழல் எல்லாம்
முழுதும்
பக்குவமாய்த்தான் இருக்கிறது
நானே
நான் மட்டிலுமே
வருத்தமுற்றிருக்கிறேன்.

வெண்மையைப்
போர்த்திக் கொண்டிருக்கும்
வினோத இருளைத்தான்
எல்லா பக்கங்களிலும்
நான் பார்க்கிறேன்.

என் உன்னத எண்ணங்களுக்காக
சொர்க்கங்கள் காத்துக் கிடக்கின்றன.
ஆனால்
சோர்வு ஒன்று மட்டுமே
என்னோடு
சேர்ந்து வரக் காண்கின்றேன்.

நம் இல்லங்கள்
அருகருகே அமைந்திருந்த போதும்
மிக நீண்ட
காலங்களுக்குப் பிறகுதான்
ஒருவரோடு ஒருவர்
உரையாடத் தொடங்கினோம்.

இருக்க இடமின்றி
உடுத்த உடையின்றி
உலவும் மனிதர்கள் மட்டுமே
அன்பின் பதாகையை
உயர்த்திப் பிடிப்போராய் இருக்கிறார்கள்.

வெளிச்சத்தோடும் நிழல்களோடுமான
வாழ்க்கையின் உரையாடல்களை
நான் எழுதியிருக்கிறேன்

ஆனால்
என்னால் புரிந்து கொள்ள முடியாதவை
ஞாபகங்கள் மட்டுமே.

எழுதியவர் : எழில்வேந்தன் (7-Aug-15, 12:52 pm)
சேர்த்தது : எழில்வேந்தன்
Tanglish : vaazhkkai
பார்வை : 731

மேலே