நரகத்தை நோக்கி

சாவின் தூது - மது
இது உறவுக்கு எதிரி
இழுக்குக்கு மாதிரி
என்றைக்காவது
எனத்தொடங்கிய பழக்கம்
என்றைக்கும்
என மாறிபோகும் வழக்கம்
தொடக்கத்தில் மதுவோடு முடிக்கிறான்
முடிவில் மனைவி பிள்ளையின்
கண்ணீரையும் சேர்த்துக் குடிக்கிறான்
மது ஒரு மாயாவி....
விடலை பருவத்தில்....
விளையாட்டாய் உள் நுழையும்
காதல் தோல்வியில்....
தோழன்போல் முகம் காட்டும்
கடன் தொல்லையில்.....
ஆதரவாய் கை நீட்டும்
கருமாதி வீட்டில்......
கவலைக்கு மருந்தாய் தலை ஆட்டும்
விசேஷ வீடுகளில்....
கட்டாய விருந்தாளியாய் கலை கட்டும்
மது ஒரு மாயாவி......
இது உள்ளே போனதும்
நாறுவது வாய் மட்டுமல்ல
வாழ்க்கையும்தான்....
மாறுவது உணர்வு மட்டுமல்ல
உறவுகளும், உலகமும்தான்....
"மண் தோன்றா முன் தோன்றிய மூத்தக்குடி"
இன்று.....
கள்ளுக்கும் .".புல்லுக்கும் புரையோடிபோனது
வீரம் விளைந்த வீதிகள்
போதையில் மிதப்பவன் ஒதுங்கும் கரையானது
வாழ்வியல் நெறிகள் எல்லாம் காற்றோடுபோனது
மதுக்கடைகள் அரசு வசம் என்றானது
மாக்களை மக்களாக்கும் கல்வி தனியார் வசம் சாகுது
இதில் - தாய்நாடு வல்லரசு ஆவது எப்போது?
கூலி வேலை
செய்பவனாலும் குடிக்க முடிகிறது
கோடிக்கோடியாய்
சேர்ப்பவனாலும் அடிக்க முடிகிறது
அடிமை-ஆண்டவன்
இலக்கணம் பொருந்தா உலகம்
இப்போதை உலகம்தான்
இன்பத்தை துன்பத்தில் தேடும்
விட்டில்பூச்சி குடிகாரர்கள்
வீட்டில் இருப்பவர்களை
நினைப்பதும் இல்லை
அவர்களை வீதியில் நிறுத்த
மறப்பதும் இல்லை
கிளைநுனி அமர்ந்து அடியை வெட்டும்
முட்டாள்களுக்கு எப்போது புரியும்?
மதுவால் அழிவது அவன் மட்டுமல்ல
அவனை சார்ந்த சமூகமும்தான் என்று?