உயிரோடிருத்தல்

என்ன
வந்துவிடப்போகிறது
எனும்
குதர்க்கத்திலேயே!
எண்ணற்ற
ஊடல்கள்!
எனக்குள்..

ஓசோன் ஒழுகி
இந்த கிரகம்
தீர்ந்தால்
இன்னோர் கிரகம்
இல்லையா என்ன‌
நீ மெளனித்திருக்க!!

போ!
சிறகுகள்
வலிக்கும் வரை!
வானம் தொலையும்!
வரை எனை
மறந்து போ...
சிறைகளேதுமில்லை..

வா!
கடந்த வழி
சிறகு மடக்கி
குப்பறக்குதி!
என் உயிர்வலி
திரட்டி அமுதம்
ஊட்டுவேன்!!
வா...

நந்தவன‌
நாகங்களின்
எண்ண‌த்தில் என்ன‌
நட்சத்திரம்
முழுங்கிடும்
மோகமா!

உயிரோடிருத்தல்
அபத்தமெனும்
அசரீரியில்!
"அதுவொன்றும்
அவசியமில்லை"
உரத்த குரலில்
உன் மெளனத்தின்
மொழி...

உயிரோடிருத்தல்
அவசியப்படுகிறது
உன் மெளனத்தை
நீள் கவியாக்க..

நீ மெளனித்திரு
ஐந்தாறு
ஜென்மமாய்
அப்படித்தானே
இருந்தாய்!!
இந்த ஜென்மத்தில்
என்ன அவசியம்..

உயிரோடிருத்தல்
அவசியப்படுகிறது
வாரம் ஒரு
முறையேனும்
உன் கல்லறைக்கு
பூங்கொத்து வைக்க..

உயிரோடிருத்தல்
அவசியப்படுகிறது
உன் கருவை
இல்லை
நம் கருவை
நான் சுமக்க..

எழுதியவர் : புலவூரான் ரிஷி (7-Aug-15, 11:34 pm)
பார்வை : 69

மேலே