நான் எந்திரன் அல்ல

ஒரு திறந்த புத்தகம் என்பதால்
எளிதாக
இடைச்செறுகல் செய்துவிடலாம்
என்று சிலர் எண்ணுகிறார்கள்.
என்னை உணர்ந்தவர் யாவரும்
என் மொழியினை அறிவர்.

இதயத்தால் அனிச்சம்
எண்ணத்தில் எரிமலை
கரத்தில் காந்தள்
கருத்தில் உருக்கு.

எரிக்கும் நெருப்பிலும்
உயிர்க்கும் பறவை.
குருதிச் சேற்றிலும்
முளைத்தெழும் குருத்து.

என் வலி அறியாமல்
வாளோடு வந்தவனும்
வழித்தவறி வந்ததாய்ச் சொல்லி
தாள் பணிந்து திரும்புவான்.

என்ன காரணத்துக்காக
முகமூடி அணிந்தாலும்
எனக்கு
முகமூடி மனிதர்களை
அறவே பிடிக்காது.

முகம் திறந்து பேசாதவர்களுடன்
பேசலாம்
ஆனால்
மனம் திறந்து பேச முடியாது
ஏனெனில் நான் எந்திரன் அல்ல.

எழுதியவர் : எழில்வேந்தன் (8-Aug-15, 12:00 pm)
பார்வை : 111

மேலே