காதல் = கடவுள்
காதல் = கடவுள்
* * * * * * * * * * * * * *
இருக்கிறதா இல்லையா
என்ற அய்யத்தால்
தரிசனம் கிடைப்பது
அவ்வளவு எளிதில்லை என்பதால்
சுற்றி வரச் செய்வதால்
உள்ளுருக்குதலால்
பரிதவிக்க விடுவதால்
பரவசப் படுத்துவதால்
வேண்டுதல்களுக்கு விரைவில்
செவி சாய்க்காதிருப்பதால்
சோதனைகளுக்கு உட்படுத்துவதால்
விரதம் இருக்க வைப்பதால்
தூங்க விடாமல்
விழித்திருக்கச் செய்வதால்
ஏங்க வைப்பதால்
பித்தனாக்கிப் பிதற்றவும் செய்தலால்
குட்டிக் கொள்ளவும்
முட்டிக் கொள்ளவும் முனைதலால்
அவ்வப்போது அருள் பாலிப்பதால்
கனவுகளில் வருவதால்
“நம்பினோர் கைவிடப் படார்”
என்னும் நல் வாசகத்தால்
சன்னதியில் யாவரும் சமம் என
பேதங்கள் யாவும் கடந்திருப்பதால்,
ஃ காதல் = கடவுள்