கரை தட்டி நிற்கும் கப்பல்

தோட்டத்து வேலிகளில்
பார்த்திருக்கக் கூடும்
பெயர் அறியா
சின்னஞ்சிறு பூவொன்றை.

தாயின் ஸ்பரிசமென
கன்னம் தடவிச் செல்கிறது
வண்ணத்துப் பூச்சி.

ஒலியைக் காற்றில் உமிழ்ந்தபடி
தன் பெயரை...
எழுதியும் பேசியும் செல்கிறது
சிறு பறவை.

நிழல் குடை விரிக்கும் மரம்
தன் மேல் வளரும் கூடுகளை
காற்றால் முத்தமிட்டு
அன்பைச் சொல்கிறது.

கிராமத்தின்
இனிப்பின் அரும்புகள்
என் நினைவுகளில்
பச்சையாய் கிளை விரிக்க...

என் பிள்ளைகளின்
பால்யத்தின் நதியில்
சிறகு விரித்த
கனவுகளின் காகிதக் கப்பல்

கரை தட்டி நிற்கிறது
நகரத்து வாழ்வில்.

எழுதியவர் : rameshalam (8-Aug-15, 7:26 pm)
பார்வை : 98

மேலே