ஈழம் நேசி

வணக்கம் தோழமைகளே,

இறுதிப்போர் முடிந்த பிறகு இரண்டு தேர்தல் முடிந்து மூன்றாவதாக பிரதம மந்தரி தேர்தலை ச ந்திக்கிரார்கள் ஈழ மக்கள், விலைகொடுக்கவே முடியாத பாரிய இழப்புகளை கொடுத்து, தாங்கொணா துயரில் இன்றும் தவித்துக்கொண்டு இருக்கின்ற ஈழத்தமிழ் மக்கள்.

உரிமைகளையும், உறவுகளையும், வீடுகளையும், நிலங்களையும், ஊர்களையும் இழந்துவிட்டு, நிகழ்கால வாழ்க்கையும் எதிர்கால கனவும் ஏவுகணைகளின் தீயில் பொசுங்கிவிட, இன்றும் நாதியற்றவர்களாய் நடுத்தெருவில் கிடக்கின்றார்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததும், பெருவாரியாக இருந்த சிங்கள பேரினவாதம் நாட்டை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டது. சிறுபான்மை இனமான தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வுகளை வழங்காமல் பாசிசக் கொள்கைகளைக் கொண்டு கோலோச்சி வந்தது. தமிழர்கள் இரண்டாம்தர குடிமக்களாக புரம்தள்ளப் பட்டார்கள்.

கல்லூரி முதற்கொண்டு அனைத்துத் துறைகளிலும் சிங்களவர்களுக்கே முன்னுரிமைகள் வழங்கப்பட்டன. அந்த நாட்டுச் சட்டத்திட்டங்களும் சிங்களவற்கே சாதகமாக இயற்றப்பட்டன. இதனால் தமிழமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியது.

தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, இலங்கையை ஒரு சமதர்ம குடியரசு நாடாக ஆக்க வேண்டும் என்பதற்காக சில தமிழ் அரசியல் தலைவர்கள் பாடுபட்டார்கள். ஒரு போலி குடியாட்சியை நடத்திக்கொண்டு இருந்த சிங்கள இனவாத ஆட்சியாளர்கள், தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள, தமிழ் அரசியல்வாதிகளிடம் சில ஒப்பந்தங்களை செய்தார்கள், தமிழக அரசியல் தலைவர்களும் இதை நம்பி ஏமார்ந்தார்கள், இதற்கு எடுத்துக்காட்டாகத்தான் 1956 ல் செய்யப்பட பாண்டா - செல்வா ஒப்பந்தமும், 1960 ல் செய்யப்பட ஸ்ரீ மாவோ ஒப்பந்தமும், 1965 ல் செய்யப்பட டட்லி ஒப்பந்தமும் நமக்கு சாட்சியாக இருக்கின்றன.

இப்படிப்பட்ட ஒப்பந்தங்களால் தமிழர்கள் ஏமாற்றப்பட்ட பிறகுதான், இனி ஏமாற முடியாது என்று கருதி வட்டுகோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அதன் பிறகு தமிழர்கள் மேலும் மேலும் அடக்கு முறைகளுக்கு ஆளானார்கள், தமிழர்கள் பல இடங்களில் ஆயுதாரி சிங்களவர்களால் தாக்கப்பட்டார்கள், இதனால்தான் ஆயுதப் போராட்டம் தலை தூக்கியது, ஆயுததாரிகளை ஆயுதங்களால் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை தமிழர்களுக்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது.

தமிழர்கள் ஆயுதங்களை விரும்பி எடுக்கவில்லை, பொல்லாத காலம்தான் வேறு வழியில்லாமல் ஆயுதத்தை அவர்களின் கையில் திணித்தது. ஆயுதம் எடுத்தவன் குற்றவாளி என்றால், அந்த ஆயுதத்தை எடுக்க காரணமாக இருந்த சிங்கள இனவாதமே முதல் குற்றவாளி, தமிழர்கள் ஆயுதம் எடுத்தது தீவிரவாத மென்றால், அவர்கள் ஆயுதம் ஏந்த தூண்டுகோலாக இருந்த சிங்கள இனவாத போக்கே முதல் தீவிரவாதம் ஆகும்.

நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சமதர்ம உரிமையை வழங்க மறுத்தது சிங்கள பேரினவாதத்தின் முதல் அடிப்படைக் குற்றமாகும், குடிமக்களின் வாழ்வாதாரம் மற்றும் அரசியல் அதிகாரங்களை ஏற்றத்தாழ்வு இல்லாமல் சமமாக்கி மக்களை வாழ வைப்பதற்கு பதிலாக, ஒப்பந்தம் என்ற போர்வையில் 60 ஆண்டு காலமாக மக்களை ஏமாற்றி, அவர்களின் வாழ்க்கையை சிதைத்து கடைசியில் ஒரு இன அழிப்பையே நிகழ்த்திவிட்டது சிங்கள அரசு.

உலக நாடுகளே புலிகளையும் தமிழர்களையும் தீவிரவாதிகள் என்று கூறுகிறார்கள், ஆனால் பாண்டா ஒப்பந்தமும், டட்லி ஒப்பந்தமும், ஸ்ரீ மாவோ ஒப்பந்தமும், ஏன் சிங்கள அரசால் நிறைவேற்றப்படவில்லை? - இதைப்பற்றி யாராவது பேசுகிறார்களா? இல்லையே... 13 வது திருத்தச்சட்டம் ஏன் வலுவிழக்கச் செய்கிறார்கள் என்று யாராவது பேசுகிறார்களா? இல்லையே.... அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஒரு மாநில அரசாகவாவது தமிழர் பகுதியை அறிவிக்க வேண்டும் என்று யாராவது கூறுகிறார்களா? இல்லையே....... ஒரு ஜனநாயக பொது வாக்கெடுப்பு நடத்தச் சொல்லி யாராவது வலியுருத்துகிரார்களா இல்லையே........ தனது மண்ணில் தான் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுவது குற்றம் என்றால் பிறகு இந்த உலகத்தில் எங்கே நீதி இருக்கப் போகிறது.

கண்முன்னே அப்பாவித் தமிழர்கள் கூட்டம் கூடமாக கொல்லப்படும்பொழுது வேடிக்கைப் பார்த்துகொண்டு இருந்த ஐநா மன்றம், போர் முடிந்து 6 ஆண்டுகள் கடந்துவிட்டப் பிறகும், இன்னும் தமிழர்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றது, குற்றம் புரிந்தவனையே விசாரணை நடத்தச் சொல்லும் உள்ளக விசாரணை என்பது தமிழர்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் உச்சகட்ட சதியாகும், தமிழர்கள் யாரும் உள்ளக விசாரணையை விரும்பவில்லை, அவர்கள் சர்வதேச விசாரணையையே நம்பிக்கொண்டு இருக்கிறார்கள், இந்த நிலையில் ஐ நாவும் கைவிட்டால் அவர்கள் எங்கே செல்வது?

2013 ஆம் ஆண்டில் நடந்த மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து, தங்கள் உணர்வுகளை உலகிற்கு எடுத்துக்காட்டினார்கள் தமிழ் மக்கள். இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தமிழ்க் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக பெரிதாக எதையும் செய்யவில்லை, சிறை கைதிகள் விடுவிக்கப்படவில்லை, ராணுவப்பிடி தளர்த்தப்படவில்லை, வன்கொடுமைகள் நின்றபாடில்லை, காணாமல் போனவர்கள்பற்றிய தகவல் தெரியவில்லை, சிங்கள ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படவில்லை, மக்கள் கஞ்சிக்கே அல்லல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள், ஆனாலும் அங்கே சென்று வருகின்ற சில பாசிச அரசியல்வாதிகள், அங்கே மக்கள் எந்த பிரச்சனையும் இன்றி மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்று பொய்ப் பிரச்சாரங்களை அப்பட்டமாக செய்கிறார்கள்.

கடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் ஸ்ரீ சேனாவை ஏற்றி, ொடியவன் ராஜபக்சேவுக்கு சரியான பாடம் புகட்டினார்கள் தமிழர்கள், இதிலிருந்தே தமிழர்களின் உணர்வுகளை உலகம் புரிந்துகொண்டு இருக்கும், ஆனாலும் ஸ்ரீ சேனாவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் என்பது குறைந்த நாட்களிலேயே அறியத் தந்துவிட்டார்.

தமிழ் மக்கள் யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என்று குழம்பி இருக்கின்ற நிலையில், இந்த மாதம் மீண்டுமொரு பிரதம மந்திரி தேர்தலை சந்திக்க இருக்கின்றார்கள். உலகமே கைவிட்டுவிட்ட தமிழ்மக்கள் இன்று தனித்து நின்று தங்கள் நீதியை மீட்க போராடிக்கொண்டு இருக்கிறார்கள், இந்த நிலையில் இனக்கொலை செய்த ராஜபக்சேவுக்கு வாக்களித்து, மீண்டும் இனக்கொலை நடக்கவோ அல்லது போற்குற்றத்திளிருந்து தப்பிவிடவோ வாய்ப்பளிக்காமல் இருப்பது தமிழ்மக்களின் கடமையாகும். மக்கள் இந்த விடயத்தில் தெளிவாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் போலித்தனமான போக்குகளால் மக்களிடம் இருந்த தங்கள் செல்வாக்கை கெடுத்துக்கொண்டார்கள், 2013 ஆம் ஆண்டு மக்கள் அவர்களுக்கு கொடுத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி அதையே அஸ்திவாரமாக கொண்டு,மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு நடந்திருந்தால், இந்நேரம் மக்களின் மனதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கோட்டையை அவர்கள் கட்டி இருக்கலாம், இன்றைய சூழலை பார்த்தல் தமிழ்தேசிய கூட்டமைப்பின்மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு உள்ளதாக தோன்றுகிறது.

மனரீதியாக மக்களை சிலர் குழப்பும் வேலையை செய்துகொண்டு இருக்கிறார்கள், இந்த குழப்பு வேலையினால் தமிழர்களின் வாக்குகள் சிதரப்பட்டுவிட்டால், சிங்களவர்களின் வாக்குகள் மொத்தமும் சிங்களவர்களுக்கே கிடைத்து ராஜபக்சே வெற்றிபெற வழியாகிவிடுமோ என்ற அச்சம் உருவாகிறது.

எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஈழமக்கள் தெளிவாக இருப்பார்கள் என்பதை கடந்த இரண்டு தேர்தல்களிலும் எம்மால் நன்கு உணர முடிந்தது, ஆகையினால் ஈழ மக்களை எவராலும் ஏமாற்ற முடியாது, அப்படி ஏமாற்றுபவர்கள் நிச்சயம் தூக்கி எறியப்படுவார்கள், அதை இந்த தேர்தல் நமக்கு காட்டும்.

ஈழ உறவுகளே தமிழ்தேசிய கூட்டமைப்பிலும், வெளியே உள்ள இதர தமிழர் தலைமை தாங்கும் அமைப்புகளிலும், துரோகிகள் அற்ற தமிழர் க ட்சிகளிலும் உங்கள் உணர்வுகளை புரிந்துகொண்ட சில நல்லவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் யார் என்று இனம்கண்டு அவர்களுக்கு உங்கள் வாக்குகளை வழங்கி வெற்றிபெறச் செய்யுங்கள், நமக்குள்ளே இருக்கும் கருப்பு ஆடுகளை நம்பாதீர்கள், உங்கள் கையில் இருக்கும் வாக்குகளே இப்பொழுது உங்களுக்கு ஆயுதம், நாம் யாருக்கும் விலைபோகமாட்டோம் என்று நிருபவியுங்கள்.


-------------------------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன், தச்சூர். (9-Aug-15, 8:46 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 197

சிறந்த கட்டுரைகள்

மேலே