தனித்தன்மை

'தன்மை' எனும் சொல் தன்னைப் பற்றியப் பண்புகளைக் குறிப்பிடுவதாய் அமைகிறது. தன்னைப் பற்றிக் குறிப்பிடும் வகையில் தனக்கு மட்டுமே உரியப் பண்பைத் தனித்தன்மை எனக் குறிப்பிடலாம். 'பண்' என்பதைச் 'சீர்' என்று அர்த்தம் கொண்டு 'பண்பு' என்பதைச் சீரானத் தன்மை அல்லது சீரானப் பழக்கம் என்று அர்த்தம் கொள்ளலாம். ஆக தனித்தன்மை என்பது தன்னிடம் மட்டுமே உள்ள நல்ல அல்லது சீரானப் பழக்கம் எனலாம்.

நமது தனித்தன்மை நமக்குள் எப்படித் தோன்றுகிறது? அது பிறப்பிலா?? இல்லை வளர்ப்பிலா? தனித்தன்மையின் தோற்றம் இயற்கையானதாகவோ தூண்டப்பட்டதாகவோ அல்லது விபத்தாகவோ இருக்கலாம். இயற்கையில் தோன்றும் தனித்தன்மை என்பது மிகுந்த ஆற்றல் திறன் கொண்டதாகவும் இறவாத்தன்மை உடையதாகவும் இருக்கும். அதாவது இயற்கையிலே தோன்றும் திறமைகளைத் தனித்தன்மையாகக் கொண்டவர்களின் படைப்புகள் அழியாத் தன்மை உடையதாக இருக்கின்றன. இந்த வகை மிகவும் அரிதான மக்களிடமே காணப்படுகிறது. அவர்களை நாம் சான்றோர்கள் என்கிறோம். இவர்கள் தான்தோன்றித் தனமானவர்கள். அவர்கள்தான் வரலாற்றின் பக்கங்களை நிரப்புகிறார்கள்.

தூண்டப்பட்டத் தனித்தன்மை என்பது மற்றவர்களின் தனித்தன்மைகளால் தானும் தூண்டப்படுவது. இதனால் ஏற்படும் தனித்தன்மை அந்த நபரின் ஆர்வத்தையும் முயற்சியையும் பொறுத்து அமையும். இதுவே மக்களிடம் பொதுவாகக் காணப்படும் வகையாகும். ஆயினும் பலபேர் இதனை அறிந்துக்கொள்ளாமல் வாழ்வை முடிப்பதுண்டு. தனது வாழ்வை மேம்படுத்திக் கொள்ள சிலர் இந்தத் தனித்தன்மையை வளர்த்துக்கொள்கிறார்கள். அவர்கள் இயற்கையிலான தனித்தன்மை உடையவர்களை பின்பற்றி அவர்களைப் போல தங்களை மாற்றிக்கொள்ள முயற்சிப்பார்கள். இது எந்த வகையிலும் தவறில்லை. இக்கால வாழ்க்கைக்கும் முன்னேற்றத்திற்கும் இந்தத் தனித்தன்மை முக்கியப் பங்கு உண்டு.

விபத்தாகவோ அல்லது எதிர்பாராத விதமாகவோ ஏற்படும் தனித்தன்மை காலங்கருதி பெரும் வளர்ச்சியைக் கொடுக்கும். காலத்தின் தேவையினால் திடீரென உருவாகும் தனித்தன்மையை அதிபுத்திசாலித் தனத்தின் தற்காலிகமானதாகவே இருக்கும். திடீர் அதிர்ஷ்டம் என்பது இதனை தக்கவைத்துக் கொள்வதுவே.

நமது தனித்தன்மையை நாம் உணர்ந்துக்கொள்வது மிக அவசியமாகிறது. நமக்கு இயற்கையின் மூலம் உருவாகும் தனித்தன்மை இருக்கிறதா என்பதை உணரவேண்டும். அது எவ்வாறு எனில் எதை நாம் அதிகம் சிந்திக்கிறோமோ எதைப்பற்றி சிந்திக்கும்போது நம்மை நாம் மறக்கிறோமோ அதில் நாட்டத்தை செலுத்தவேண்டும். அப்படி நம்மில் எதுவும் நடப்பதில்லை என்கிற நிலையில் சிறந்தவர்களைப் பார்த்து அறிந்து தெளிந்து அவர்களைப் பின்பற்ற முயற்சிக்கலாம். நாம் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு சிலரை பின்பற்றுவது இந்த வகையான முயற்சியே. மூன்றாவது வகையை உணர்வது நம்மிடம் இல்லை காலத்திடமே உள்ளது.

தனித்தன்மை உடையவர்களாக வாழ்ந்தால் மட்டுமே நாம் பிறரால் கவனிக்கப்படுகிறோம். அப்போதுதான் நமது வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாகின்றன. மற்றவர்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாத நமது தனித்தன்மையே நமக்கு அடையாளத்தைக் கொடுக்கும். தம் இறப்பிற்கு பிறகு தம் அடையாளத்தை விட்டுச்செல்வது மனித இனத்தின் தனித்தன்மை. அதற்குள் நாமும் நமது தனித்தன்மையைப் பதிப்போம்!

எழுதியவர் : அலெக்சாண்டர் (9-Aug-15, 8:07 pm)
Tanglish : thanithanmai
பார்வை : 1142

சிறந்த கட்டுரைகள்

மேலே