நீர்மை ததும்பும் நிலவு

நீர்மை ததும்பும்
கண்ணோடு வருகிறது
நிலவு.

மினுமினுப்பான துயரங்களின்
ஊதிய உடலோடு
பெருகுதலின் உச்சத்தில்
இருந்தது நிலவு.

இரவின் சீறல்
அதன் நீர்ம உடல் மீது
பாசியாய் விரிய...

காலத்தின்
நினைவுகள் இறுக
அதன் உடல்...

ஒரு மலையின்
முடிச்சாகிறது.

அதன் உடலெங்கும்
விளையும் கதைகள்
இரவின் முனகல்களாகி...

தோணிகளாய் மிதக்கின்றன
கடற்கரையெங்கும்.

மீன்களோ...
மூச்சு விறைக்க
கடலின் ஆழத்தில்
நிலவின் கதைகளைப்
புதைக்கின்றன.

இரவுகளோ...
உறக்கமற்றதாகிவிட

அதன் இரவுக் குறிப்புகள்
நிலத்தின் வெப்ப காலங்களைச்
சேகரிக்கின்றன.

சலிப்பில் நிறையும்
துயரங்களை மறைத்தபடி
குழந்தைகளை உறங்கவைக்கும்
நிலவின்...

நீர்மைக் கண்களை
ஆறுதலாய்த் துடைக்கின்றன
சிறு விரல்கள்.

களவாடப்பட்ட
தன் வாழ்வின் துயரம் தாங்காது...

யாரும் அறியாமல்...

ஒரு கடவுளுக்காகக்
காத்திருந்தது

நாம் அறியாத நிலவு.

எழுதியவர் : rameshalam (10-Aug-15, 1:05 pm)
பார்வை : 94

மேலே