விளிம்பில் பிறக்கும் சிறகு
வரலாற்றின்
எல்லா ஏடுகளிலும்
வழிகிறது....
துரோகங்கள்
புகையும் நதி.
காலத்தின் இரகசியம்...
நீண்ட தந்திரத்தின்
சாலையை...
தம் வசப் படுத்தி இருந்தது.
நினைவுகளின் புழுதி
சூழ்ச்சிகளின் மையமாக...
பௌர்ணமிகளின் பித்தமாகிறது
அவரவரின்
வேட்கை துரத்தும் காலம்.
ஆசைகளின் வெயில்
சீர்மை குழம்பிய உடலில்
சிடுக்கேறிய கூந்தலாய் பரவ...
புகை எரியும் மணத்தில்...
கண் மழையில்
வெளியேறுகிறது
கனவுப் பறவை.
எளிமையின் பயம்...
நடுங்கித் தவிக்க
சரித்திரத்தின் மிருக வனம்
தன் சலங்கைகளில்
சுதி கூட்டுகிறது.
துயர மழையின்
பிம்பப் படிமங்கள்
நிலமெங்கும் சரிய....
கசிந்த கண்களின்
இடுக்குகளில் பதுங்குகிறது
குருதிகளின் காலம்.
நீர்மாலைகள்
இமைகளின் கூடாரத்தில்
சேந்தப்பட...
விடுபடுதலின் வெடிப்பாய்...
வானத்தின் விளிம்பில்
பிறக்கிறது
ஒரு பறக்கும் சிறகு.
இயல்பாய்...
இறுகிய பாறைப் பூமியில்...
மழை அருந்தி...
பிறக்கிறது
ஒரு புதிய வரலாற்றின்
கல்.