தேடாதிருப்பேனாக
இனி ஒரு பொழுதும்
உன்னைத் தேடாதிருப்பேனாக.
இன்று அதிகாலையின்
முதல் கிரணத்தில்
புல்வெளிகளின் வழியே
வண்ணத்துப் பூச்சியாய்...
நீர் நிலை
தேடும் பறவையாய்
மழையில் நனைந்த
மின்மினியாய்
ஆகாயத்தில்
உலவத் துவங்கினாய்.
எப்பொழுதும்
மலரெனத் தெளிச்சியுறும்
உன் கண்கள் ...
தொடுவானத்தை
இடித்துச் செல்கிறது.
கருவறையின்
மதகைத் திறக்கும்
உன் நினைவின் பெருக்கு...
விளிம்பு தளும்பி
கண்களின்
இடுக்கோடு கசிகிறது.
காலவேர்
தன் செவுளசைத்துச் சிரிக்க...
கசங்கிய ஜிகினாத் தாள்களாகி
கலைகிறது வாழ்க்கை.
சிக்கல்கள் விரியும்
இந்தக் கணத்தில்...
கனத்த மூச்சினைச் சுமந்து
நடக்கிறேன்....
இனி ஒரு பொழுதும்
உன்னைத் தேடாதிருப்பேனாக.