மதுவே மனம்திருந்த மாட்டாயோ

அரக்கர்குலத்தோன்றலின்
மறக்கமுடியா மெகா மொந்தையே
அரசக்குல கவுரவத்தின்
அசைக்கமுடியா மஹா சந்தையே

அன்று
அங்கொன்றும் இங்கொன்றுமாக
இலைமறை காய்மறையாக இருந்த நீ
இன்று
சந்துக்கு சந்து
சாமி கோவில்கள் என்றும் பாராமல்
ஜோராக கொலுவீற்றிருக்கிறாய்..!

குடி – குடியை கெடுக்கும்!
விளம்பரத்தின் ஊடுடே
திரைக்கதாநாயகன் பற்களால்
திறக்கிறான் மதுப்புட்டிகளை..

திரைப்படங்களில்
கதாநாயகனின் சாகசங்களுக்கு..
கைத்தட்டி பழகிப்போன நாம்
பழக்க தோசத்தில்
அவன் மது புட்டிகளை திறப்பதற்கும்
கைத்தட்டி பழகிப்போனோம் !

அன்று
இலவசங்கள் இல்லாதபோது
இருந்த இடம் தெரியாமல் இருந்தது,
இன்று
இலவசங்களே இலக்காணப்போது
பரவசமாய் பவனிவருகிறது ஏசி பார்களோடு.!

அன்று
பெரும்தனக்காரர்களின் அலமாரிகளை மட்டுமே
அலங்கரித்துவந்த அழகழகான மதுப்புட்டிகள்
இன்று
ஆட்சியாளர்களின் அரசாணைப்படி
ஏசி அறைகளில் சரவிளக்கு சகஜமாக
கண்ணாடிப்பேழைகளில் காட்சிப்பொருளாக !

கூலித்தொழிலாளிகளுக்கு
தன் குழந்தைகளைவிட
உன்மேல் கொள்ளைப் பிரியமாம்..!
ஏனெனில்
போலியாய் நீ தரும் போதையே
இராவானால் அவனுக்கு லாலியாம்..!

‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடாம்’
உபதேசம் செய்பவர்களின் பிணாமியாய்
ஊருக்கு வெளியே சாராய ஆலைகள் !

ஆண்ட-வர்களுக்கும், ஆள்பவர்களுக்கும்
வித்தியாசமில்லா விகிதாச்சாரம்
மது புட்டிகளை வினயோகிப்பதில் மட்டுமே !

தேச நலனில் அக்கறை உள்ளவர்களின்
மது ஒழிப்பு பிரச்சாரம்
போலீஸ் தடியடியால் பொலி போடப்படுகிறது,
காந்தியவாதி சசிபெருமாளே அதற்கு சாட்சி..!

காட்டாட்சி தர்பாரில்
காரியவாதிகளின் கூட்டாட்சி தத்துவம்
ஆட்சியை பிடிக்கும்வரைதான்
பிறகென்ன எல்லாவற்றிர்க்கும் ஜன கன மனதான்.

எழுதியவர் : இரா.மணிமாறன் (13-Aug-15, 8:51 am)
பார்வை : 85

மேலே