தனித் தனியானால்

.......................................................................................................................................................................................

ஒவ்வொரு மாநில எல்லை சுற்றி
பெருஞ்சுவர் ஒன்று அமையக் கண்டேன்..
தனித் தனியான பல வகைக் கொடிகள்
தனித்தனி நாளில் பறக்க கண்டேன்..!

எல்லைக் கோட்டில் பிளாஸ்டிக் குப்பை
இமயம் போலக் குவியக் கண்டேன்..!
எடுப்பாரில்லா குப்பை மேட்டில்
ஈயும் கொசுவும் பரவக் கண்டேன்..

சில மாநிலங்கள் இலங்கை வசம்..
சிலது பாகிஸ் தானிடமே...
சிற்சில பகுதியில் காணுகின்றேன்..
சீன மொழிதான் ஆட்சி மொழி...!

மக்கள் தொகையும் பாதியாகி
மண்ணைக் காக்க மாளக் கண்டேன்..!
மாண்டவர் பூமியில் சந்ததிகள்
அகதிகளாகி அலையக் கண்டேன்..

பசித்த மழலை நீரருந்த
பால்முலை காமுகன் இதழருந்த
கொழித்த தட்டு உணவிற்கு
கொல்லத் துணியும் நிலை கண்டேன்..

கர்நாடகாவில் காவிரி தோன்றி
கர்நாடகாவில் கலக்கக் கண்டேன்..!
கர்நாடகாவின் துயரம் என்றே
காவிரி நதியை அழைக்க கண்டேன்..!

தஞ்சைத் தரணி பாலை மணலில்
மீத்தேன் வாயு எடுக்கக் கண்டேன்..
மீத்தேன் விற்று மீந்த பணத்தில்
பிடிநெல் வாங்கிப் புசிக்கக் கண்டேன்..!

பக்கத்து கேரளா பஸ்ஸில் போக
பாஸ்போர்ட் விசா கேட்க கண்டேன்..!
மக்களில்லாத மலைத்தொடர் எங்கும்
போதைச் செடிகள் விளையக் கண்டேன்..!

இழிந்தவர் கையில் சுதந்திரம்.. எனில்
இதுதான் இதுதான் நிரந்தரம்..!
எனக்கென்ன என்று இருந்து விட்டால்
இடிதான் தலையில் இறங்கி நிற்கும்..!

இந்தியா என்றொரு வளநாடு
இருந்தது என்பது வரலாறு..!
இன்னும் பொறுப்பாய் நடந்திருந்தால்..???????
இதயம் கனத்தது நினைவோடு..

“ பஞ்சாப சிந்து குஜராத மராட்டா
திராவிட உச்சல வங்கா..”

அம்மம்மா...! ! !

நஞ்சாம் கனவு கலைந்தம்மா..
நறுந்தேன் செவியில் பாய்ந்தம்மா..

ஜெய் ஹிந்த்..! ! !

எழுதியவர் : அருணை ஜெயசீலி (14-Aug-15, 1:19 pm)
பார்வை : 130

மேலே