தேசத்தைக் காப்போம் -ரகு

மகாகவி ஊமைத்துரை கப்பலோட்டியத் தமிழனென
.....மாமனிதர்கள் வாழ்ந்ததெங்கள் நாடு -அந்த
மகாத்மாக்கள் நித்தம்நித்தம் ரத்தம்சிந்திப் போராட
.....மலர்ந்ததிந்தச் சுதந்திரத்திரு நாடு!

வேலுநாச்சி யார்ஜான்சி ராணி லட்சுமிபாயென
.....வீரமங்கைகள் வாழ்ந்ததெங்கள் நாடு -வந்த
வெள்ளையனை வெளியேற்றி வீரமிகுக் கொடியேற்றி
.....விடுதலையைச் சொந்தங்கொண்ட நாடு ! .

வாங்கிவந்த சுதந்திரத்தை வன்முறையும் கலவரமும்
......வாரிப்போக விடுவோமோ நாளை -நெஞ்சில்
தூங்குகின்ற வீரத்தைத் தூங்கவிடுங் கோழையாகித்
......துறப்போமோ சுதந்திரத்தின் வேலை!


கொள்ளையடிக்கத் துணிந்தோர்க்கு கோட்பாடற் றோருக்கு
......கொடுப்போமோ ஆட்சியதன் மொத்தம் -அன்று
வெள்ளையனே வெளியேரென வீரமுழக்க மிட்டனரே
......வீண்தானோ சிந்திச்சென்ற ரத்தம் !

வாழ்வியலின் பாடத்தை வரலாறு பயிற்றுவிக்க
......வளம்சேர்ப்போம் நாமனைவர் கூடி -உயர்
தாழ்வென்னும் பிரிவினையைத் தரமற்றக் கொள்கையதைத்
......தரணியிலேத் தீயிடுவோம் தேடி!

அறிவியலின் ஆக்கத்தில் அயல்நாட்டின் ஆதிக்கம்
......அதனினும் திறம்படநாம் துணிவோம் -நாட்டில்
செறிவானக் கல்வியறிவு சிறந்தோங்கும் முயற்சியதை
......சிந்தைக்குள் அணிகலனாய் அணிவோம்!

இல்லாமை இயலாமை இவற்றிற்குப் பணியாமல்
......எழுச்சியோடு புதுவிடியல் பார்ப்போம் -அச்சங்
கொள்ளாமல் குறுகாமல் குறுக்குவழி தேடாமல்
......கண்களெனத் தேசத்தைக் காப்போம் !

தள தோழர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள் !!!
அன்புடன்
--சுஜய் ரகு---

எழுதியவர் : சுஜய் ரகு (15-Aug-15, 10:46 am)
பார்வை : 423

மேலே