சுதந்திரமே எமக்கு சுகமளித்தாய்

சூரியன் தூங்கி தூமக்கேது விழித்த வேளையில்
சுதந்திரக் காற்றை மொத்தமாய் சுவாசித்துக்கொள்ள
ஆங்கிலன் நமக்கு அதிகாரப்பூர்வ ஆணையிட்டான்
இனிமேல் இந்தியனெனக்கு முப்பாட்டன் என்றான்

விடுதலைப் பத்திரத்தை கைகளில் பெற்றதும்
கையெழுத்திட்ட விரல்களை முத்தம் இட்டும்
உச்சத்தாழியில் கூக்குரலிட்டு, பட்டாசுக் கொளுத்தி
எக்காளமிட்டு தேசியக்கொடியை கோட்டையில் ஏற்றினோம்

உத்தமர் காந்தி உழைத்த உழைப்பு
பண்டித் நேரு காட்டிய முனைப்பு
சந்திர போஸ் கொடுத்த துணிவு
பண்டிதன் பாரதி முழங்கிய பாட்டு
பக்க பலமாய் மற்றையத் தலைமைகள்
இலட்சக் கணக்கில் சுதந்திர முழக்கங்கள்,,,
அடிப்பட்டு உதைப்பட்டு மிதிப்பட்டு சிறைப்பட்டு
சிந்திய இரத்தத்தின் ஊதியம்தான் இன்றுநாம்
சுவாசிக்கும் சுத்த சுதந்திரத்தின் மொத்தக்காற்றும்!

சுதந்திரக் கொடியை ஏற்றுபவர் களெல்லாம்
காந்தியவாதிகள் ஆகிவிட்டால் பிறகு எதற்கு
அவர்களுக்கு அய்ந்தடுக்கு பலத்த பாதுகாப்பு ?
குண்டு துளைக்காத கார்களின் அணிவகுப்பு ?

தேசிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற வேளைகளிலும்
சாலைகளில் தங்களது கட்சிகொடிகள் பறக்கின்றதை
பார்த்து ரசித்து சிரிக்கின்ற மனோபாவம் – இன்றையத்
தலைவர்களின் தவிர்க்கமுடியாத சடங்காகவே இருக்கின்றது

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக
விடுதலைத் திருநாள் கொண்டாட்டமாக உஙகள்
கண் டீவியில், விளம்பரத்தின் ஊடே கதாநாயகி
கதாநாயகனோடு அளவளாவிக்கொண்டிருப்பாள் அரைகுறை
ஆடைகளோடு ! ஓ இதுதான் ஒருவேளை சுதந்திரமோ ?
இந்தக்கன்றாவிகளை காணத்தான் நமக்கு விடுமுறையோ ?

நல்ல நிகழ்ச்சிகள் இல்லாமல் இல்லை - ஆனால்
நல்ல நிகழ்ச்சிகளின்போது தங்களது ரேட்டிங்க்காக
குத்துப்பாட்டுக்களுக்கு குதிக்கவிட்டு, சண்ணடைக்-
காட்சிகளை பரப்பிவிட்டு சம்பாத்தியம் பண்ணுவதேனோ ?
அடச் சீ வெட்கப்படு..! என்ன இவர்களின் தேசப்பற்று….?

ஆண்டுகள் அறுபதைதாண்டி எழுபதைநோக்கி நெருங்கி
வருகின்றோம்
அன்னியனை வியப்பிலாழ்த்தி அபாரவளர்ச்சி அடைந்து
வருகின்றோம்
ஆனாலும் உலகவங்கிக்கு இன்றளவும் கடனாளியாகவே இருந்து
வருகின்றோம்
அதனாலயே வாக்குவங்கிக்கு கரண்சிநோட்டுகளாய் பெற்று
வருகின்றோம்

தேசத்தின் கடன்தொகையை இந்தியனுக்குப் பங்கிட்டால்
பிச்சைக்காரனுக்கும் பணக்காரனுக்கும் ஒரே தொகைதான்
ஏற்றத்தாழ்வுகள் ஏனோ இந்தயிடத்தில் மட்டும்
மாற்றான் தாயாக விரும்பாமல் மடிப்பிச்சை கேட்கிறது

எது எப்படி இருந்தாலும், எவன் எப்படிப் போனாலும்
சுதந்திரத்துக்குமுன் ஒருரூபாய்நோட்டை முழுதாகப்பார்க்காத இந்தியப் பாமரன்
சுதந்திரத்துக்குப்பின் நூறுரூபாயை பாக்கெட்டில் பார்ப்பதென்பது பெருத்த வளர்ச்சிதான் !
வாழ்க சுதந்திரம் ! வளர்க பாரதம் !

எழுதியவர் : இரா.மணிமாறன் (15-Aug-15, 12:36 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 75

மேலே