பெண் நிலா-12

சுந்தரத்தை அழைத்துக்கொண்டு சற்று தள்ளிப்போன கலாவதி அவர் கைகளை பிடித்துக்கொண்டு “ ஏங்க அந்த அண்ணாமலை ஏற்கனவே நம்ம ரைஸ்மில்லுல உங்ககிட்ட நெல்லு வியாபாரம் பார்த்தவர் தானே,” என கேட்க

கலா எதுக்கு அடி போடுகிறாள் என்பதை சுந்தரம் ஓரளவுக்கு யூகித்திருக்க “ஆமா அதுக்கென்ன இப்போ” என்று எரிச்சலாக கேட்டார்

“ ஏங்க இப்படி எரிஞ்சு விழறீங்க, அந்த பொண்ணைப் பார்த்தா ரொம்ப அழகா அடக்கமான பொண்ணா தெரியுது, நம்ம சத்யனுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பாங்க, நீங்க அண்ணாமலைகிட்ட இதைபத்தி பேசுங்க’’ என்று கலா நைசாக பேச

“ ஏன் கலா நான் தெரியாமத்தான் கேட்கிறேன், உனக்கு அதுமாதிரி ஒரு பொண்ணு இருந்து அவளை நம்ம சத்யன் மாதிரி ஒரு பையனுக்கு கல்யாணம் பண்ணிக்குடுப்பியா, உன் மனசாட்சியை தொட்டு பதில் சொல்லு கலா” என்று சுந்தரம் மெல்லிய குரலில் கேட்க

“ நீங்க சொல்றது எனக்கும் புரியுதுங்க, ஆனா நம்ம சத்யன் இயல்பாகவே கெட்டவன் இல்லைங்க, ஏதோ வயசு கோளாறு இப்படி சுத்துறான், ஆனா நல்ல திறமைசாலின்னு நீங்களே எத்தனை தடவை சொல்லிருக்கீங்க, நீங்க வேனா பாருங்க கல்யாணம் பண்ணதுக்கு அப்புறமா அவன் எப்படி மாறுறான்னு, தயவுசெய்து இனிமேல் அவனை பத்தி மட்டமா பேசாதீங்க, நம்ம புள்ளைய நாமலே கேவலப்படுத்தினா அப்புறமா மத்தவங்க என்ன சொல்லுவாங்க, நீங்க அவருகிட்டே அந்த பொண்ணை பத்தி விசாரிச்சு எப்படியாவது அவளை நம்ம சத்யனுக்கு பேசி முடிங்க, அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்தா எல்லாமே சரியாயிடும்னு என் மனசு சொல்லுதுங்க, தயவுசெய்து செஞ்சி அவர்கிட்டே போய் கேளுங்க” என கண்களில் கண்ணீருடன் ஒரு நல்ல தாயாக மகனை விட்டுக்கொடுக்க முடியாமல் கலா பேச

எப்பவுமே தன் மனைவியின் கண்ணீரை காண பொறுக்காத சுந்தரம் இப்போது தன் மனைவியின் கண்களில் கண்ணீரை பார்த்ததும் மனைவியின் கைகளை பிடித்துக்கொண்டு “ அய்யோ என்ன கலா இதுக்கு போய் அழுதுகிட்டு, எனக்கு மட்டும் சத்யன் மேல அக்கரையில்லையா கலா, இந்த சின்ன வயசிலேயே இப்படி சுத்துறானேங்ுற ஆதங்கத்துலதான் அப்படி சொன்னேன், சரி கோயில்ல வச்சு அந்த பொண்ணை ஆண்டவன் காட்டியிருக்கார், உன் இஷ்டப்படி எல்லாம் நல்லதாவே நடக்கட்டும்” என்று மனைவியை சமாதானம் செய்துவிட்டு அண்ணாமலையிடம் போனார்

அதற்க்குள் அண்ணாமலையின் மனைவி, பிள்ளைகள், மான்சி,என எல்லோரும் அவருடன் இருக்க, அவர்களின் முன்னால் என்ன பேசுவது என்று தடுமாறிய சுந்தரம், பிறகு சுதாரித்து

“ என்ன அண்ணாமலை இவங்கதான் உன் பிள்ளைங்களா, ரொம்ப சின்ன பசங்களா இருக்காங்க” என்று சம்பிரதாயமாக பேச்சை ஆரம்பித்தார்

“ ஆமாங்கய்யா கல்யாணமாகி எட்டுவருஷமா குழந்தைங்க இல்லாம அதுக்கப்புறம் இவங்க ரெண்டுபேரும் பிறந்தாங்க, ஒருத்தன் பத்தாவது படிக்கிறான், சின்னவன் எட்டாவது படிக்கிறான்,” என்று கூறினார்

அண்ணாமலைக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது இவ்வளவு பெரிய பணக்காரர் நம்மலோட இவ்வளவு நேரம் பேசிகிட்டு இருக்காரே என்றுதான் சந்தோஷம் ,

அவர் மனைவிக்கு அதைவிட தலைகால் புரியவில்லை, யப்பா அந்தம்மா எவ்வளவு நகை போட்டுருக்காங்க, பெரிய கோடீஸ்வரியா இருப்பாங்க, என்று நினைத்து ஏக்கமாய் பெருமூச்சு விட்டாள்

“சரி அண்ணாமலை நாங்க கிளம்பனும், உன்னோட போன் நம்பர் குடு நான் உன்கிட்ட முக்கிமான விஷயமா கொஞ்சம் பேசனும்” என்று சுந்தரம் கேட்டதும்,
அதுவரை சந்தோஷமாக இருந்த அண்ணாமலையின் முகம் மாறிவிட்டது,

மெல்ல தயங்கிபடி “ முன்னாடி அய்யாகிட்ட நெல்லு வியாபாரம் பார்த்தில் கொஞ்சம் பணம் பாக்கி நின்னுபோச்சு, சீக்கிரமே அதை குடுத்துர்றேன்” என பணிவான குரலில் அண்ணாமலை சொல்ல

“ அட என்னாப்பா நீ நான் அந்த பணவிஷயத்தை பத்தி எதுவும் பேசலை, இன்னும் சொல்லப்போனா எனக்கு அது ஞாபகம் கூட வரலை, நான் உன்கிட்ட போன் நம்பர் கேட்டது வேற ஒரு நல்லவிஷயம் பேசத்தான், நீ மொதல்ல நம்பரை குடு நான் வீட்டுக்கு போய் அதைப்பத்தி போன் பண்ணி சொல்றேன்” என்று சுந்தரம் சாதாரணமாக பேசியதும்

அண்ணாமலை நிம்மதியுடன் தனது நம்பரைச் சொல்ல, சுந்தரம் மொபைலை எடுத்து அவர் சொன்ன நம்பரை பதிவு செய்துகொண்டார்

“ சரி அண்ணாமலை நாங்க கிளம்புறோம்” என்று அண்ணாமலையிடம் விடைபெற்ற சுந்தரம் திரும்பி மான்சியை பார்த்தார்

அவள் தனது பெரிய கண்களை இன்னும் பெரிதாக விரித்து, அந்த கோயிலின் கோபுரத்தில் இருந்த மாடப்புறாக்களை பார்த்துக்கொண்டு, பக்கத்தில் இருந்த மாமன் மகன்களிடம் கையை ஆட்டிஆட்டி பேச, அவளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவள் காதுகளில் இருந்த ஜிமிக்கிகள் ஆடியபடி அவள் பேச்சை ஆமோதித்தது,

அவளின் குரல் வீணையின் மெல்லிய நாதம் போல சுந்தரத்தின் காதுகளில் விழ, அவரையும் அறியாமல் அவர் மனம் ‘கடவுளே இந்த பொண்ணு மட்டும் சத்யனுக்கு மனைவியாக வந்தால், எனது வீட்டுக்கு அந்த மகாலட்சுமியே வந்தமாதிரி இருக்குமே, எப்படியாவது இந்த கல்யாணம் நடக்கனும், என்று அந்த ஆண்டவனை வேண்டினார்

(தொடரும்.....)

எழுதியவர் : (15-Aug-15, 11:18 am)
பார்வை : 262

மேலே