மனுசங்க
``அம்மா நான் பாசாயிட்டேன்''.கையில் பேப்பரோடு ஓடி வந்த சுவாதியை கட்டி அணைத்துக் கொண்டாள் அவள் தாய் .பிளஸ் 2 தேர்வில் பாசாகியதோடு மட்டுமல்லாமல் மார்க்கும் நல்ல எடுத்திருக்கிரா...1200 க்கு 1117 மார்க்க சும்மாவா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா...அவள் அம்மாவும் தான் .
அவளோட வீட்டுக்காரர் அவளை விட்டுட்டு போனபிறகு 2 குழந்தைகளோடு அதுவும் ஒன்றும் வயித்தில , சுவாதிக்கு 1 1/2 வயசு இருக்கும்., அவ அப்பா வீட்டுக்கு வந்தவள் அன்றையிலிருந்து அப்பாக்கூட மாடுகளை பராமரித்து பால் கறந்து வாயிக்கும் வயிற்றுக்கும் போராடி இவ்வளவு தூரத்துக்கு படிக்க வச்சிருக்கானா அவளுடைய உழைப்பை பாராட்டியே ஆகணும்....
அம்மா நான் டாக்டருக்கு படிக்க போறேம்மா .. என்று சுவாதி சொல்லும்போது ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும் செலவுக்கு என்ன செய்ய போறோமோ என்ற கவலை அடிமனதில் கேள்விக் குறிகளை எழுப்பிவிட்டுச் சென்றது..ஏதாவது மறுப்பு சொல்லி அவளுடைய ஆசையை கலைக்க அவளுக்கு விருப்பமில்லை.
அடுத்த நாளே மருத்துவம் கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பித்தும் விட்டாள் .விண்ணப்பித்து இன்றோடு 12 நாட்களுக்கு மேலாகி விட்டது .
ட்ரிங்..ட்ரிங்....தபால்காரரர் வந்திருந்தார் ...
``சுவாதிங்கிறது யாரம்மா''...
``நாந்தாங்க''
``உனக்கு லெட்டெர் வந்திருக்குது ,பதிவு தபால்
கையெழுத்து போட்டு வாங்கிப் பார்த்தாள்.
பயோ தொழில்நுட்பப் படிப்புக்கு நாளை நடக்க இருக்கும் கலந்தாய்வில் அண்ணா அரங்கத்தில் கலந்து கொள்ளும்படி எழுதி இருந்தது ...
சுவாதிக்கு கொஞ்சம் வருத்தம் தான் .அவள் விண்ணப்பித்து இருந்த மருத்துவம், மற்றும் கால்நடை மருத்துவ படிப்புக்கு கட்-ஆப் (cut -off ) - மார்க் குறைவாக இருந்ததால் வராததை நினைத்து வருத்தப்பட்டாலும் இந்த படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள ஊரிலிருந்து அம்மாவோடு கிளம்பத் தயாரானாள்.
சுவாதியும் அவள் அம்மாவும் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துக்கு அதிகாலை 5 மணிக்கு வந்து சேர்ந்தாங்க.பல்கலைக் கழக வளாகம் அமைதியாக இருந்தது....அங்கு கலந்தாய்வு நடப்பதற்கான எந்த பரபரப்பும் இல்லாமல் இருந்தது...எப்படின்னாலும் நம்ம திருச்சி -இலிருந்து வந்தது மாதிரி பல ஊர்களிலிருந்து ஆட்கள் வந்திருப்பார்களே....யாரையுமே காணவில்லையே ...வெளியூர் ஆட்கள் இரவில் வந்தவங்க இங்கே தங்கி இருப்பாங்களே ....கொஞ்சம் பேர் அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தார்கள் . அதுவும்..அவர்கள் காலை நடை பயிற்சி வழக்கமாக மேற்கொள்பவர்கள்.
அங்கிருந்த காவலாளி அருகில் போய் விசாரித்தாள் சுவாதி.
``அய்யா’’......
தூக்க கலக்கத்திலிருந்த அவர் ``யாரது...’’.என்று மெல்ல கண்களை நிமிர்த்தி பார்த்தார்.
``என்னம்மா.’’..
``அய்யா நாங்க திருச்சியிலிருந்து வருகிறோம்....இன்றைக்கு நடக்க இருக்கிற கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு.’’...
``இன்றைக்கு இங்கு கலந்தாய்வு ஏதும் நடக்க வில்லையே....போனவாரமே இங்குள்ள கலந்தாய்வுகள் முடிந்துவிட்டதே ...நீங்கள் தவறுதலாக வந்துள்ளீர்கள் ‘’ என்றார்....
இதைக் கேட்டதும் சுவாதிக்கு அதிர்ச்சியடைந்து ஒரு வித பீதி அவளுக்குள் ஏற்பட்டது.கண்களில் கண்ணீர் அழுகையாக மாறி கொட்ட ஆரம்பித்தது.....
அப்போது அங்கு வந்து சேர்ந்தார்கள் ....பாலாவும் விஸ்வநாதனும் மற்றும் சீனிவாசன் .சிறிது நேரத்தில் கோமளாவும் வந்தாங்க இவர்கள் எல்லோரும் தினசரி நடைபயிற்சிக்கு வருபவர்கள் ..பாலா அண்ணா பல்கலைக் கழகத்திலும் கோமளா I .T நிறுவனத்திலும் சீனிவாசன் மாநில மின்சார வாரியத்திலும் விஸ்வநாதன் கல்வித் துறையிலும் வேலை பார்க்கிறார்கள் ...எல்லோரும் தினசரி இங்கு வந்து அறிமுகம் ஆனதில் பழக்கமானவர்கள் .......
`` என்னப்பா விஷயம் ''-காவலாளியிடம் பாலா கேட்டார்.
``சார் இவங்க திருச்சியிலிருந்து வந்திருக்காங்க ....இங்க கலந்தாய்வுக்கு கலந்து கொள்ள .....இங்கு எந்த கலந்தாய்வும் இல்லையே''
``கலந்தாய்வுக்கு வரச் சொல்லி வந்த லெட்டெர் எங்கம்மா ‘’-சீனிவாசன் கேட்கவே ஸ்வாதி கொண்டுவந்த கடிதத்தை காட்டினாள்.
`` ஐயோ ..என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க ‘’...
``அண்ணா அரங்கம். -கோயம்பத்தூர் என்று போட்டதை அண்ணா பல்கலைக் கழகம் என்று நினைச்சி இங்கே வந்திட்டீங்களேம்மா ‘’...
``அதுவும் காலை 8.30 மணிக்கு வரச் சொல்லி இருக்காங்க ..இப்ப என்ன பண்ண போறீங்க ‘’
ஆளாளுக்கு சொல்லச் சொல்ல சுவாதிக்கு அழுகை அழுகையாய் வந்தது.. என் எதிர் காலமே பாழாப் போச்சி ...ஐயோ ...ஐயோ ....என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்
....அவளைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது .அவளம்மாவும் கூடவே அழுது கொண்டிருந்தாள்.
``சரிம்மா அழாதீங்க ....-முதலில் டீ சாப்பிடுங்க ... ஏதாவது பண்ண முடியுமாவென்று பார்ப்போம் ..-என்று கோமளா மேடம் சொன்னதும் பக்கத்திலிருந்த டீ கடையில் எல்லோரும் டீ சாப்பிட்டார்கள் .
டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே .....அவங்க நான்கு பேரும் நாம ஏன் அவங்களுக்கு உதவக் கூடாது என்று தீர்மானித்தார்கள் . விமான டிக்கெட் எடுத்து அவங்களா அனுப்புவதென்றும் பாலாவை வைத்து கோயம்புத்தூர் இல் இருக்கும் அவருடைய நண்பர் மூலமாக மற்ற உதவிகள் செய்வதென்றும் தீர்மானிக்கப் பட்டது.
விஸ்வநாதன் - இணையத்தில் விமான டிக்கெட் எடுத்து வர கிளம்ப
பாலா கோயம்பத்தூரிலிருக்கும் அவருடைய நண்பருக்கு போன் போட்டார். அவர் அங்குள்ள வேளாண்மை பல்கலைக் கழகத்தில் அலுவலகத்தில் பணிபுரிகிறார்
``ஹலோ சரவணனா'' ..
``ஆமாம் சார் நான்தான் பேசுகிறேன் ...சொல்லுங்க சார்'',
பாலா இங்கு நடந்த எல்லா சம்பவங்களையும் கூறி
.``நீங்க உடனடியாக உங்க பல்கலைக் கழகத்தில பதிவாளரை தொடர்பு கொண்டு நிலைமை விளக்கிச் சொல்லி மாணவியை கலந்தாய்வுக்கு அனுமதிக்கும்படி ஏற்பாடு செய்யுங்க.. 8.30 மணிக்கு வர வேண்டியவங்க ..........கொஞ்சம் லேட்டா வருவாங்க ..... என்று சொல்லுங்க .....நாங்க அவங்களை விமானத்தில் அனுப்பி வைக்கிறோம்.''
``கண்டிப்பாக செய்கிறேன் . மீண்டும் உங்களை தொடர்பு கொள்கிறேன் சார் '' என்று கூறி இணைப்பை துண்டித்தார் சரவணன்.
அப்போது விஸ்வநாதன் ,
``சார் டிக்கெட் எடுத்தாச்சு ...10 மணிக்கு விமானம் '' .... காரை அவர் ஓட்ட எல்லோரும் விமான நிலையம் நோக்கி பறந்தார்கள் .
அடுத்த முப்பது நிமிடங்கள் அமைதியாகக் கழிந்தது. பாலாவின் அலைபேசி ஒலித்தது .சரவணன் லைன் இல் இருந்தார்
``சார் நான் பேசிட்டேன் ... எல்லா விவரத்தையும் கூறினேன் ..பலகலைக் கழக பதிவாளர் சரியென்று சொல்லி விட்டார் .அவங்க எத்தனை மணிக்கு சார் வருவாங்க''
``10 மணிக்கு விமானம் ....11.40 க்கு கோயம்புத்தூரில் தரை இறங்கும் .....நீங்க கார் ஏற்பாடு பண்ணி அவங்களை பல்கலைக் கழகத்துக்கு கூட்டிக் கொண்டு போய் கலந்தாய்வு முடிந்து திருச்சிக்கு வழி அனுப்பி வையிங்க .......சரியா சரவணன் ....எவ்வளவு செலவோ அதை உங்களுக்கு பிறகு அனுப்பி வைக்கிறேன் ‘’
``அப்படியே பண்ணுகிறேன் சார் . பணம் ஒன்றும் அனுப்ப வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.''
சுவாதிக்கு எல்லாமே புதிராகவே இருந்தது ...யாருமில்லாத ஊரில் வந்து மாட்டிக். கொள்வோமென்றோ..திக்குத் தெரியாம முளிப்போமென்றோ...தெய்வம் மாதிரி இந்த முகம் தெரியாத மனுசங்க வந்து உதவுவாங்க என்றோ ,மேலும் விமானத்தில் சவாரி செய்ய போகிறோம் என்றோ அவள் நினைத்து பார்த்திருப்பாளா.எல்லாமே அதிசயமாகவே இருந்தது .இந்த பூமியில் மனிதம் இன்னும் சாகவில்லை ...கடவுள் இருக்கிறாங்களோ இல்லையோ என்று சுவாதிக் கிட்டே கேட்டால் இருக்காங்க என்றுதான் சொல்வாள். அதுவும் ஒரு கடவுள் இல்லை .... அந்த 4 பேரும் அவளுக்கு கடவுளாகத்தான் தெரிந்தார்கள் .
``விசுவா - மணி இப்போது 8 .15 தான் ஆகுது .9 மணிக்குதான் .அதாவது விமானம் கிளம்ப 1 மணி நேரத்துக்கு முன்னாடிதான் பிரயாணிகளை அனுமதிப்பாங்க . வழியில் ஒரு ஹோட்டலில் நிறுத்தி அவங்களுக்கு டிபன் வங்கிக் கொடுத்திடுவோம் ''
சீனிவாசன் இதைச் சொல்லவும்,
``டிபன் வேண்டாம் சார் -
சுவாதி தளதளத்த குரலில் மறுதலித்தாள் .
.
``அப்படி சொல்லாதம்மா ....இங்கே சாப்பிட்டுருங்க ...அங்கே உங்களுக்கு எல்லாம் முடியும்போது சாயுங்காலம் ஆகி விடும் .ஒன்றும் கவலைப் படாதம்மா ...
பலகலைக் கழகத்திலே பேசியாச்சு ...நீ நினைச்சபடி எல்லாம் நல்ல படியாக நடக்கும் .''
இருவரும் சாப்பிட்டபிறகு கிளம்பி சரியாக 9 மணிக்கு விமான நிலையம் வந்து சேர்ந்தார்கள் .
``விமான நிலையத்தில் உங்களைக் கூட்டிக் கொண்டு போக பாலா சாருடைய நண்பர் -சரவணன் என்று பேர் ,வருவார் ...அவரு உங்க கூடவே இருப்பார் . எல்லா உதவியும் செய்வார் சந்தோசமா கலந்தாய்வில் கலந்துக்கம்மா ''
சீனிவாசன் சொல்லியதும் சுவாதி அழுதே விட்டாள்.சரியென்று தலை அசைத்தாள் ....கோமளா சுவாதியை ஆறுதலாக அணைத்துக் கொண்டே ....
``நல்லா படிக்கணும் ...அப்பப்ப எங்கள் 4 பேருக்கும் போன் பண்ணனும் ...ஏற்கனவே எல்லோருடைய போன் நம்பர்கள் கொடுத்திருக்கிறோம் அல்லவா'' .....
``சரி மேடம் ''.கை கூப்பிய படியே சுவாதியும் அவளுடைய அம்மாவும் விமான பயணிகள் பரிசோதனைக் கூடத்துக்குள் நுழைய எல்லோரும் விடை பெற்றுக் கொண்டார்கள்.
...............................
மணி 4 இருக்கும் ..பாலாவின் டெலிபோன் மணி ஒலித்தது ....
``சார் நான் சரவணன் பேசுகிறேன் ...எல்லாம் நல்ல படியாக முடிந்தது சார் ...இப்பதான் வெளியே வந்தோம் ''....
``ரொம்ப நன்றி சரவணன் ''
``இதுல எதுக்கு நன்றி ..சார் ...உங்களுடைய மனிதாபிமானத்தில் நானும் சிறிது பங்கு கொண்டேன் அவ்வளவுதான் ''....
``சார் சுவாதி பேசணுமாம் ''
``கொடுங்க' ...
`` ரொம்ப நன்றி அய்யா ....எனக்கு பேசவே முடிய வில்லை ,
அப்புறம் நீங்க திருச்சிக்கு வரும்போது கண்டிப்பாக எங்க வீட்டுக்கு எல்லோரும் வரணும் ''
பாலா சிரித்துக் கொண்டே ``கண்டிப்பாக வருகிறோம் அம்மா ......நல்லா படிக்கணும் ...’’
மேடத்திடமும் மற்றவங்ககிட்டையும் என்னுடைய நன்றியை சொல்லிடுங்க சார் ...நானும் சொல்லிவிடுகிறேன் ......ஊருக்கு கிளம்புகிறோம் ...பஸ் வந்திடுச்சு அய்யா '....
``சரிம்மா'' ...
பஸ் ஏறும்போது சுவாதி அந்த நால்வர் இருக்கும் சென்னையை நோக்கி கையெடுத்து கும்பிட்டாள் கண்களில் துளிர்த்த ஆனந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ....
பஸ் திருச்சியை நோக்கி மெல்ல கிளம்பியது . பேருந்துக்குள் இருந்த ஸ்பீக்கர் இல் T .M.சவுந்தராஜன் பாடிக் கொண்டிருந்தார் ;
``இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையைக் கண்டேனே '' .
.