இவர்களுக்காய் அவர்கள்

அதிகளவு எதிர்பார்ப்புக்கும்
சிறிதளவு முயற்சிக்கும்
இடையில்
அலைந்து கொண்டிருக்கிறது
இவர்கள் காலம்.
சமையல் அறையில்
இடையுறாது
ஒலிக்கும்
தொலைபேசிச்
சிணுங்கல்களை
காஞ்சி புரங்கள்
கைவளையல்கள்
கைக்கடிகாரங்கள்
சின்னத்திரைத்
தொடர்கள்
முகப் பூச்சுக்கள்
நகச்சாயங்கள்
நிறைத்துக் கொள்வதால்
அடுப்பில்
அரைகுறையாக
கொதித்துக்
கொண்டிருக்கும்
குழம்புகள்
உவர்ப்பா புளிப்பா
எனத் தெரியாது
உருக்குலைந்து
போகின்றன..
எல்லாம் ஓய்ந்த
அந்த நாளின் முடிவில்
இருளின்
முதுகுத் தண்டு கிழித்து
இறுதியாக
வரும் பேரூந்தில்
இரண்டாவது ஷிப்ட்
முடித்து
இறங்கி வந்து கதவு தட்டும்
இவர்கள் கணவர்கள்
கைப்பையில்
ஏதோ கனவுகளுடன்
காத்திருக்கும் வங்கி அட்டை
இறுதி மூச்சு விட தயாராகிறது
நாளை இவர்களுக்காக ....

எழுதியவர் : உமை (15-Aug-15, 10:12 pm)
சேர்த்தது : உமை
பார்வை : 100

மேலே