கேள்வி தொடுக்கின்றேன்

அலையும் மேகங்களே ! - உமை
---அமிழ்த்தி அழகு வடிவங்களாய்க்
கலைகள் ஆக்கியதார் ? - விடை
---காட்டுங்க ளேன்சுவை கூட்டுங்களேன் !

மலையின் வடிவங்களே ! - உமை
---மாபெரும் முளிகொண்டு வளைவுகளாய்
சிலைசெய்த தார்செயலோ ? - பதில்
---சாற்றுங்க ளேனறி வூற்றுங்களேன் !

காற்றுக் கிடையினிலே! - மணங்
---காட்டிப் பறக்கின்ற மலரினங்காள்
தூற்றி உமையுமிங்கே - வெகு
---தூரத்தில் விட்டதும் யாருரைப்பீர் ?

சேற்றுக் குளத்திடையே - ஒழி
---சேர்ந்து விளங்கிடும் தாமரைகாள்
சேற்றிடை உங்களையும் - நிலை
---சேர்த்தது மார்வினை சாற்றுமினே !

வானக் கருமைகளே - மிக
---வாரித் தெளித்தும்மில் விண்மீனை
மானப் பெரிதனவே - எழில்
---மன்னப் பதித்தது மார்பணியோ ?

கானக் குயிலினமே - இசை
---கற்றுக் கொடுத்தது மாருரைப்பீர்
ஏனித் தாரணியில் - விடை
---ஏற்றிடாக் கேள்விகள் வாழுதுவோ ?

யாரிங் குறைப்பாரோ ? - புவி
---யாரால் இயங்கு தெனுங்கதையை
யாரிங்கு மொழிந்திடுவார் - எனை
---யாண்டிடும் ஐயத்தைத் தான்களையப்

பாரினி லாருளரோ ? - விடை
---பகருமின் ! பகருமின் ! அறிவுடையீர் !
சீரிய அறிவுபெறக் - கவிச்
---சிறுவனும் முயல்கிறேன் பகருமினே !

வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (16-Aug-15, 4:18 pm)
பார்வை : 79

மேலே