உன் குரலில் நான்

கண்ணாடியில் பட்டுத்திரும்பி ஒளிரும்
சூரிய ஒளிக்கற்றைகளையொத்து
என்னில் பட்டுத்திரும்பும்
உன் பார்வை
தட்டமாலைச் சுத்திப்போகும்
கிளர்ந்த ஹார்மோன்களை
பரிசுத்தமாய்
பளபளப்பாக்குகிறது.

உன் வீட்டு முற்றத்து
தூண்களுக்கடியில்
சிந்திக்கிடக்குமென்
இரத்த நாளங்களின்
மர்மமான கூவல்களை
மொழிபெயர்க்காது
சிதை பீடமேற்றுகிறது
தெருக்களைச் சிதைத்துவிட்ட‌
காலடிச் சத்தங்களின் பேருரை.

வாலைக் குழைத்து
வாஞ்சை காட்டும்
மனநாயின்
சங்கிலியை அவிழ்த்துவிட்டு
துரத்தியடிக்கிறது
வீதிகளை இணைக்கும்
வீடுகளின் புரளி.

இருத்தலுக்கும் தொலைதலுக்குமான‌
மெளனத்தில்
சூன்யக்காரத்தனத்தின்
அத்தனைச் சடங்குகளையும்
நிகழ்த்திவிட்டுப் போகிறது
வெள்ளிக் குண்டுமணி
சிந்தும் சிரிப்பொலி.

கற்றுத் தரப்படாத நாட்டுடமை
காப்பியங்களில்
புராணங்களில்
சிற்பங்களில்
சுவரோவியங்களில்
அப்பட்டமாய் அப்படியே
இருந்துவிட்டிப் போகட்டும்
உன்னைப் போலவே.

தொடர்ந்து. . .
உன் குரலில்
நான்
பேசிக்கொண்டே இருக்கிறேன்.

எழுதியவர் : மகரந்தன் (22-May-11, 6:53 pm)
சேர்த்தது : Maharandan
பார்வை : 317

மேலே