பிரம்மக் கோளாறு-3
ஆளுமைமிக்க அவயங்கள்
துடித்துப் போகையில்
களர் நிலங்களில் காவி படலம்.
.இடுக்கு வெடிப்புகளில்
மறைந்து கிடந்த வித்து முளையிட்டு
வருணன் வரும்வரை
விரதமிருந்து வாடிச் சாகும் .
மச்சத்திடம்-
மரமேறுவதை கட்டாயப் படுத்துங்கள்
வாழ்நாள் முழுதும் விவரமற்றதென்று
தன்னைத்தானே தாழ்த்தி நோகும்.
திருமாலின் ஆலயங்களில் விபூதி இல்லை
திரிபுர சிவன் கோயிலில் துளசி தீர்த்தமில்லை
கடவுளுக்கும் -
ஆளும்கட்சி எதிர்கட்சி
நமக்கு மட்டும் இருந்தா
என்ன குறைஞ்சா போச்சி
செழிப்புற்ற புல்வெளிப் பிரதேசங்களில்
மேய்ச்சலிடும் பசுவின் கூட்டத்திடம்
``உங்களைக் கொன்றதிந்த
புற்களென்று '' சொல்லுங்கள் ..
புல் மேயாதிருப்பின் பொலிவில்லை
பொலிவிலையேல் சதைப் பிடிப்பில்லை
சதைப் பிடிப்பு இழந்த எலும்பு தோல்களை
எவர் வாங்குவர் சந்தையில் ....
செழிப்புற்ற புல்வெளிப் பிரதேசங்களில்
மேய்ச்சலிடும் பசுக்களை கொன்றது அந்த புற்களே.
இரவின் எச்சங்களை நாவால் தடவி
பகலுக்கு பதில் கடிதம் எழுதி
பழுதுபட்டு போங்கள்.
காக்கையின் எச்சமாய்
காய்ந்து போனதுதான் மிச்சம் .
வானம் பிரசவிக்காமலே
வளர்பிறையும் தேய்பிறையும் வந்து போகிறது....
வேலைக்கு வறுமை வந்தாலும்
அங்காடி விலைக்கு மட்டும் வறுமை இல்லை...
வான மேதாவிகள்
வானத்துக்கேவும் ஏவுகணைத் தொழினுட்பத்தை
அங்காடித் தெருக்களில் தான்
அறிந்து கொண்டார்கள்.
ஈனக் குகையில் சிதறிய
வெளிச்ச மெனக்கேடுகளில்
பருவத் தேர்களின் கால்களில் மிதிபட்டு
உருவங்கள் புதியன படைத்தன .
இந்த கோ டங்கியின் கொட்டுச் சத்தம்
வழக்கம் போலவே
புதையுண்டு போகும் .
ஆனாலும்-
பறை கொட்டுவதும்
திரை கட்டுவதும் என் கடமை .!!!
-தொடரும்