மணமகன் தேவை- நகைச்சுவை நாடகம்

..............................................................................................................................................................................................

அலுவலகத்தில் கணிணியில் ஈ நாளிதழ் தினப்புரட்டை படித்துக் கொண்டிருக்கிறார் ஞானசேகரன். சக ஊழியர் பத்மநாபன் வருகிறார்.

ஞான: (தனக்குள்) இந்த நியூஸை வச்சி ஏதாவது ஸ்டேடஸ் போட்டா லைக்ஸ் அள்ளலாமா? அந்த படுபாவி ராம்மோகன் எப்படி இத்தனை லைக்ஸ் வாங்கறான்? எனக்கு ரெகுலரா லைக்ஸ் தட்டற குமுதினி மேடத்தையும் பிடுங்கிட்டானே? டைப்படிக்கிற அவன் கையை ஒடிச்சிடலாமா?

பத்: (வந்து கொண்டே) ஏன் சார், இந்த வயசில இப்படி செய்ய நினைக்கிறீங்களே? மோசமில்லையா? படிச்சவங்க நீங்களே இப்படி இருக்கலாமா?

ஞான: (தூக்கி வாரிப் போட) இல்லேல்லே.. ராம்மோகன் அவன் புரோஃபைல்படி மடகாஸ்கர்ல கெடக்குறான்..! என் கை அவ்வளவு நீட்டம் வராது....!

பத்: என்ன சார் சொல்றீங்க? உங்க மகளுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனா பன்னெண்டு வயசிருக்குமா? இப்பவே மணமகன் தேவை விளம்பரம் கொடுத்திருக்கீங்க?

ஞான: என்னய்யா உளர்றே? அட ஆமாம்.. தினப்புரட்டுல வந்திருக்கு..! என் பேரும் வீட்டு அட்ரசும் கொடுத்திருக்கு! மணமகன் தேவை.. உயரம், நிறம், சாதி. மதம், படிப்பு, வேலை சம்பளம் – எதுவும் தடையில்லை..! ஒரு பத்து நிமிடம் வீட்டுக்கு நேரம் ஒதுக்குபவராய் இருந்தால் போதும். திருமணமானவராய் இருந்தாலும் பரவாயில்லை.. ஆண் பிள்ளையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. விருப்பமுள்ளவர்கள் இந்த ஈ மெயிலை தொடர்பு கொள்ளவும்..! என்னோட ஈ மெயில்..! இது என்னய்யா கண்றாவி?

பத்: ஒண்ணே ஒண்ணு போட மறந்துட்டாங்க சார்..! உயிரோட இல்லாவிட்டாலும் பரவாயில்லைன்னு சேர்த்திருக்கலாம்..!

ஞான: ஐயையோ..! ஒரு வேளை தூக்கத்துல என் ஃபேஸ்புக் ஃபிரண்ட் குமுதினி பேரை உளறிட்டேனோ? காமினி டைவர்ஸூக்கு அப்ளை பண்ணிட்டாளோ? சூட்டோட சூடா அவ தான் இந்த விளம்பரத்தை கொடுத்திருப்பாளோ?

பத்: அப்ப ஏன் இங்க நிக்கறீங்க? நிலைமை முத்துறதுக்குள்ள அல்வாவும் மல்லிப்பூவும் வாங்கிட்டுப் போய் மேலிடத்தை பாருங்க..!

ஞான: மானேஜர் மேடம் அல்வா சாப்பிட மாட்டாங்க..! அவங்களுக்கு தயிர் வடை தானே பிடிக்கும்? மல்லிப்பூ நான் கொடுத்தா வாங்குவாங்களா?

பத்: வாங்கிட்டு அவங்க கொடுக்கறதை வாங்க நீங்க ரெடியா இருக்கீங்களா? நினைப்பைப் பாரு..! நான் சொன்னது உங்க மேலிடத்தை- நம்ம மேலிடத்தை இல்ல..!

ஞான: சரி சரி நான் ஓடுறேன்..!

.........................

ஞானசேகரன் வீட்டுக்கு பக்கத்தில் ஹோட்டலில் பேமிலி ரூம்..!

பாத்திரங்கள்; ஞானசேகரன், அவன் மனைவி காமினி, மகள் சஞ்சனா, மகன் மூர்த்தி, தாய் கமலா..

ஞான: (சாப்பிட்டுக்கொண்டே பேசுகிறான்) ஸாரி.. ஸாரி குமுதினி..! ச்சீ காமினி..! இந்த அல்ப விவகாரத்துக்கெல்லாம் டைவர்ஸ் பண்ண பார்க்குறது ரொம்ப தப்பு..!

காமி: ஏங்க..! நீங்க சப்பாத்திக்கு இட்லிப் பொடி தொட்டு சாப்புடறது, நூடுல்ஸ்ல ரசம் ஊத்திக்கிறதெல்லாம் தெரிஞ்ச விஷயம்தானே? இதுக்கெல்லாம் டைவர்ஸ் கேட்க முடியுமா? ஏதோ போன ஜென்ம பாவம்னு போக வேண்டியதுதானே?

ஞான: அப்ப மணமகன் தேவையை நீ கொடுக்கலியா?

காமி: எந்த மணமகனுக்கு என்ன தேவை?

ஞானசேகரன் விளக்குகிறான்.

ஞான: மன்னிச்சுக்க காமினி! புதுப்புடைவை எல்லாம் கட்டி அழகா இருக்க..! உன்னை இத்தனை நாளா கவனிக்காம விட்டுட்டேனோ?

காமி: அப்படித்தான் நினைக்கிறேன்..! ஏன்னா இது புதுப் புடைவை இல்லே..! பத்து வருஷத்து பழைய துப்பட்டா..! (தனக்குள்) மூஞ்சியப் பாரு..! அவனவன் என் ப்ரொஃபைல் பிக்சருக்கு கவிதை போடறான்..! சொந்த புருசன்; சொந்தமா காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டவன் - என்னைத் தவிர எல்லாத்தையும் பார்க்கிறான்..! ஆன்- லைன்ல அப்ளை பண்ணி ஆறே வாரம் விவாகரத்து வாங்கற காலம் வராமலா போகும்? அப்ப வச்சிக்கிறேன்..!

வீட்டுக்குப் போகிறார்கள்..!

ஞானசேகரனின் தாய் கமலா மகன், மருமகள் மற்றும் பேரன் பேத்திக்கு காபி பலகாரம் தருகிறார். வழக்கப்படி அவரவர் தொலைக்காட்சி, அலைபேசி, கணிணி, வீடியோகேம் என்று மூழ்காமல் ஒன்று கூடி பேசுகின்றனர்..!

சஞ்ச: மணமகன் தேவை விளம்பரம் ஏம்ப்பா கொடுத்தீங்க? வாட்ஸ்- அப்பில வைரலாகுது..! என்னோட ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்றாங்க..!

ஞான: (தனக்குள்) சஞ்சனா என் தோள் வரை வளர்ந்துட்டாளா? யப்பா..!

மூர்த்தி: (டாப்லெட்டை நோண்டியபடி) அப்பா, விளம்பரத்துக்கு நாப்பது அப்ளிகேஷன் வந்திருக்கு..! செம தூள்..!

காமி: நகத்தை ஏண்டா இப்படி வளர்த்து வச்சிருக்கே? முதல்ல வெட்டு..!

ஞான: எந்த படுபாவி விளம்பரம் கொடுத்தானோ? நாசமாப் போக..!

கமலா: (வந்து கொண்டே) திட்டாதேடா..! நான்தான் கொடுத்தேன்..! எனக்காக கொடுத்தேன்..!

(குடும்பம் மொத்தமும் அதிர்கிறது)

காமி: அபச்சாரம்..! அபச்சாரம்..!

ஞான: அறுபது வயசு மரியாதைப்பட்ட பொம்பளை செய்யற வேலையா இது?

கமலா: ஏன்? ஏண்டா? இந்த வீட்டுல மிக்ஸி, கிரைண்டர், வாசிங் மெஷின் இருக்கு..! நானும் இருக்கேன்..! அப்படித்தானடா வச்சிருக்கீங்க..? வரீங்க...போறீங்க.. உங்களுக்கு வேண்டிய அத்தனை பணிவிடையும் செய்றேன்..! ஒரு வார்த்தை என்கிட்ட முகம் பார்த்து பேசறீங்களாடா..? வந்தவுடனே கம்யூட்டர், மொபைல் ஃபோன், டிவி, வீடியோ..! உன் புள்ளைங்கள நேரா நின்னு சாப்பிட கூப்பிட்டா வருதுங்களா? பக்கத்து ரூமுல போயி சாப்பிட வான்னு ஈமெயில் அனுப்பணும், இல்ல எஸ்எம்எஸ் அனுப்பணும்..!

(குரல் கம்முகிறது..)

உங்கப்பா இருந்த வரைக்கும் தனிமை தெரியல..! இப்ப? சுவர்ல ஒட்டிட்டிருக்கிற பல்லி கிட்ட எவ்வளவுதான் பேச முடியும்? உங்க அத்தனை பேருக்கும் ஒரு விர்ச்சுவல் உலகம் இருக்கு..! எனக்கு நீங்கதானடா உலகமே..! இத்தனைக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி எனக்குன்னு ஒரு நிஜ உலகமே இருந்தது..! பரதநாட்டியம், ஓவியம் படிப்பு ரசனைன்னு தூள் கிளப்புற தோழிகள்..! எல்லாரையும் ஒரே முட்டா ஓரம் கட்டிட்டு குடும்பம் குழந்தைன்னு வாழ்ந்துட்டேன்..!

என்னால முடியலடா..! நான் நிறைய தரம் உங்க கிட்ட சொல்லி பார்த்துட்டேன்... நீ அம்மான்னு ஒரு கவிதை எழுதி அப்லோட் பண்ணிட்டு சும்மா இருந்துட்ட. உன் பெண்டாட்டி என்னை மாதிரி வர்ற ஏதோ டிவி சீரியல் மாமியாருக்காக மூணு நாள் முசுமுசுன்னு அழுதுட்டு விட்டுட்டா..! நிலைமை மாறல. அதான்..! விளம்பரம் கொடுத்தேன்..! மத்தபடி விகல்பமா இல்ல..! உங்களையெல்லாம் நோகடிக்க இப்படி பண்ணல..! மன்னிச்சிடுடா..!

ஞான: ஸாரிம்மா.. உறைக்கற மாதிரி புரிய வச்சுட்ட..! இன்னிக்கு ஒருநாள் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசுனது மனசுக்கு ரொம்ப இதமா இருந்தது. இதுதாம்மா நிஜம்..! இதுதான் வேணும்..! இனிமே உன்னை வருத்தப்பட விட மாட்டோம்..!


முற்றும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (23-Aug-15, 4:23 pm)
பார்வை : 852

மேலே