நடத்தை

நடத்தை என்பது நடக்கும் விதம் அல்லது பழகும் விதம் என்று அறியலாம். நடத்தை நமது பண்பு நலன்களைப் பொறுத்து அமைகிறது. பெரும்பாலும் நாம் அதிகமாகப் பார்க்கும் நபரின் நடவடிக்கையே அதற்கு அடிப்படையாக அமைகிறது. நாம் பிறந்தது முதல் இது நம்மிலிருந்து வளர ஆரம்பிக்கிறது. குழந்தைக்கு முதலில் அறிமுகமாகும் நபரான அம்மாவின் நடவடிக்கைகள் குழந்தையை வெகுவாகப் பாதிக்கிறது. அந்தப் பாதிப்புகளே குழந்தையின் நடத்தையின் அடிப்படையாகிறது. குழந்தை வளர்ப்பில் குறைந்தது முதல் நான்கு வருடங்களேனும் தாயின் அருகாமை குழந்தைக்குத் தேவைப்படுகிறது. பச்சிளம் வயதிலேயே குழந்தையை பகல் காப்பகத்தில் விட்டுவிட்டு பனிக்குச் செல்லும் பெற்றோரின் குழந்தை எப்படி நடத்தையைக் கற்றுக்கொள்ளும்? அக்குழந்தைக்கு எதிர்காலத்தில் வாழ பணமிருக்கும் ஆனால் குணம் இருக்காது.

நான்கு வயது மேற்பட்டபின் குழந்தையின் நடத்தையை தந்தையின் நடவடிக்கைகள் தீர்மானிக்கிறது. தந்தையைப் பிடித்துப் போனக் குழந்தைக்குத் தந்தையின் குணநலன்களே முழுதும் ஆள்கிறது. தான் எதைச் செய்யும்போதும் தந்தை செயல்படுத்தும் முறையையே குழந்தை நினைவில் வைத்துக்கொள்கிறது. தந்தை ஒரு முன்மாதிரியாக இங்கு செயல்படுகிறார். பொறுப்பில்லாத தந்தையின் குழந்தைகள் பெரும்பாலும் பொறுப்பில்லாமல் வளர்கிறது. தந்தையின் பொறுப்பு அவரது நடத்தையில் இருக்கிறது.

கல்விப்பருவத்தில் நண்பர்களும் ஆசிரியர்களும் நடத்தையின் வளர்ச்சியைப் பெரும்பங்குக் கொள்கிறார்கள். வெளிஉலக அறிமுகத்தில் கண்ணில் படும் நடவடிக்கைகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றன. நண்பர்களின் சேர்க்கை நல்லது கெட்டது என்பதை சொல்லித்தருவதில்லை. அத்தருணமே ஆசிரியர்களின் அறிவு உதவுகிறது. ஆசிரியரின் அறிவுரை நல்ல நண்பர்களை அடையாளம் காட்டுகிறது. நல்ல நண்பர்களின் அறிமுகம் நல்ல நடத்தையைக் கற்றுத்தருகிறது. நல்ல நடத்தையே நல்லத் திறமைகளை வளர்க்க உதவிடுகிறது.

கல்விப்பருவம் முடிந்து வேலைக்குச் செல்லும் பருவம்தான் இத்தனை நாள் கற்ற நடத்தைகளை செயல்படுத்த பொருத்தமானக் களமாக அமைகிறது. தொழில் களத்திற்கான நடத்தை என்று தனியாக ஒன்று இல்லையென்றாலும் அப்படி ஒன்றை ஏற்படுத்திக்கொள்வது அவசியமாகிறது. தொழில் களமானது சமூகமாக ஒன்று கூடி இயங்க வேண்டி இருப்பதால் சில நன்னடத்தைகளும் ஒழுங்குகளும் அவசியமாகிறது. தொழில்ரீதியான செயல்பாடுகளும் திட்டங்களும் அந்தத் செயலுக்குள் மட்டுமே காண்பிக்கப் படவேண்டும். அதில் உணர்ச்சி வயப்படுவதற்கானத் தேவை அங்கே இருப்பதில்லை. குறிக்கோளை அடைவதற்குத் தேவை திறமையும் பொறுமையும் மட்டுமே.

பெரும்பாலான நேரம் தொழில் குறித்து ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையும் தனி நபர் சார்ந்தது அன்று. அதை தனி நபர் சார்ந்து எடுத்துக் கொள்ளும்போது பிரச்சனையை மேலும் பெரிதாக்கி தொழிலின் புனிதத் தன்மையை அது கெடுத்துவிடுகிறது. இந்தப் புரிதல் இல்லாததாலேயே பலரால் தொழில் களத்தின் நிம்மதியான சூழ்நிலையை உருவாக்க முடியாமல் போய்விடுகிறது. ஒரு குறிக்கோளில் எழும் பிரச்சனையை அந்த குறிக்கோளை அடைந்தவுடன் மறந்துவிடுவது அறிவுடையவர் செயலாகும். எதுவே முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எப்போதும் பிரச்சனையை எதிர்நோக்கிக் காத்திருந்தால் நமக்கு அது வியப்பைத் தராது. அதே நேரம் தெளிவான மனதுடன் அணுகும்போது எந்தத் தொழில்ரீதியானப் பிரச்சனையும் எளிதில் தீர்த்துவிடலாம்.

எழுதியவர் : அலெக்சாண்டர் (23-Aug-15, 11:27 pm)
பார்வை : 193

மேலே