இன்னிசை இருநூறு - இரண்டாவது அதிகாரம் – அறம் - பாடல் 8

இயமாதி நோய்தரினும் எய்ப்பின்று செய்க
முயல்கடை போயின் முடியாப்பே ரின்பப்
பயனெய்துங் காமாதி யின்பம்போற் பற்றும்
இயல்பினநீக் காமை இடர். 18

முயல் – வினை

பதவுரை:

இயம்ஆதி - சொல், ஒலி முதலியன

நோய்தரினும் - துன்பம் வருத்தம் போன்றவை தர நேர்ந்தாலும்

எய்ப்பின்று செய்க - இளைப்பு தளர்ச்சி முதலியன இல்லாமல் செயலாற்றுங்கள்

முயல் கடைபோயின் - முயற்சிகள் முற்றுப் பெறும் போது

முடியாப் பேரின்பப் பயனெய்தும் - அழிவில்லாத பேரானந்தத்தைத் தரும்;

காமாதி யின்பம்போல் - காமம் முதலியவற்றினால் கிடைக்கும் ஆனந்தத்தைப் போல

பற்றும்இயல்பின - நம்மை முழுதுமாக ஆட்கொண்டு விடும் தீய எண்ணங்களை

நீக் காமை இடர் - ஒதுக்கித் தள்ளி விடாதிருப்பது துன்பத்தைத் தரும்.

பொருளுரை:

சொல், ஒலி முதலியன துன்பம் வருத்தம் போன்றவை தர நேர்ந்தாலும் இளைப்பு தளர்ச்சி முதலியன இல்லாமல் செயலாற்றுங்கள். முயற்சிகள் முற்றுப் பெறும் போது அழிவில்லாத பேரானந்தத்தைத் தரும்; காமம் முதலியவற்றினால் கிடைக்கும் ஆனந்தத்தைப் போல நம்மை முழுதுமாக ஆட்கொண்டு விடும் தீய எண்ணங்களை ஒதுக்கித் தள்ளி விடாதிருப்பது துன்பத்தைத் தரும்.

விளக்கம்:

துன்பம் வருத்தம் முதலியவற்றைச் சகித்துக் கொண்டு, தளராத முயற்சி மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியங்கள் காமம், இன்பம் முதலிய இன்பத்தை நோக்கிய பற்றும் பயணமும் தரும் செயல்கள் இல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை ஆசிரியர் வலியுறுத்துகிறார்.

இங்கு நற்காரியங்கள் என்னும்போது வள்ளுவரின்,

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல். 33 அறன் வலியுறுத்தல்

என்ற அதிகாரத்தில் உள்ள குறளில்,

தன்னால் எவ்வகையிலெல்லாம் அறத்தைச் செய்ய முடியுமோ, அவ்வகையிலெல்லாம் இடையறாது அறம் செய்க என்கிறார்.

மேலும்,

அழிவதூவும் ஆவதூவும் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். 461 தெரிந்து செயல் வகை

என்ற அதிகாரத்தில் உள்ள குறளில்,

அழிக்கக் கூடியது, அழிக்கக் கூடாதது எது என்று செயல்களை ஒப்பிட்டு, அதனால் கிடைக்கக் கூடிய நற்பலனையும் ஆராய்ந்து அந்தச் செயலைச் செய்க என்றும்,

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல். 975 பெருமை

என்ற அதிகாரத்தில் உள்ள குறளில்,

நற்பண்பினை உடையவர் செயல்களைச் செய்யும் பொழுது, பிறரால் செய்ய முடியாத சிறந்த செயல்களைச் செய்வார் என்ற கருத்துகளையும் நினைந்து கொள்ளத்தக்கது.

விளக்கவுரை: திரு.கா.எசேக்கியல்

குறிப்பு:

இன்னிசை இருநூறு என்ற இந்நூல் 200 இன்னிசை வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான்களில் ஒருவராகிய சோழவந்தான் திரு.அ.சண்முகம் பிள்ளையவர்கள் இயற்றியது.

இந்நூல் மதுரையில் விவேகபாநுப் பிரஸ் நடத்தி வந்த பத்திராதிபர் திரு. மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவரால் 01.07.1913 ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

இத்தளத்திலுள்ள நண்பர்கள் அனைவரும் இப்பாடலை வாசித்துப் பயன் பெறும்படியும், கருத்தளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Aug-15, 12:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 142

மேலே