மூச்சுமுட்டும் பிணவாடைகள்
கடவுள் அல்லது
கடவுள்களைத் தேடிக்
கண்டுபிடித்தே ஆக வேண்டும்,
அவருக்கென
கட்டப்பட்ட குடியிருப்புகளிலும்
தேடிக் களைத்துவிட்டேன்,
மூச்சினை உள்ளிழுத்து
ஒருமித்த சிந்தனையில்
ஆன்மாவுக்கு மிக அருகில்
சென்றதிலும்,
அந்தப் பரமாத்மா
கிடைத்தாரில்லை...
யாத்திரைகளின் போதெல்லாம்
அவரோடு இருப்பதாகச்
சொல்லும் சிலரை
இருத்திவிட்டுச் சற்றே
புறப்பட்டுப் போனதாகச் சொன்னார்கள்.
இறுதி நாட்களில்
பாவக் கணக்குத் தீர்க்க
ஒரு பிரளயத்தோடு
வருவதாகச் சொல்லும்
கடவுள்களின் ஒட்டுமொத்த
அறிக்கைகளிலும்
மூச்சுமுட்டும் பிணவாடைகள்...!