இன்னிசை இருநூறு - இரண்டாவது அதிகாரம் – அறம் - பாடல் 9

மலைத்துணை பஞ்சுமொரு தீப்பொறியான் மாயுந்
தலைப்பட்ட நல்லறம்பல் கோடியுஞ் சாயும்
நிலைப்பட்ட சான்றோர்க்கோர் தீங்கியற்றி னீள்வான்
தலைப்பட்டுச் சாய்நகுடன் சான்று. 19

பதவுரை:

மலைத்துணை பஞ்சும் - மலையத்தனை அளவுள்ள பஞ்சாகினும்

ஒரு தீப்பொறியான் - ஒரே ஒரு சிறிய தீயின் பொறி பட நேர்ந்தால்

மாயும் - முழுதும் எரிந்தழிந்து சாம்பலாகிவிடும்;

தலைப்பட்ட - ஒருவன் செய்ய முடிந்த

நல்லறம்பல் கோடியும் - நல்ல பயன்களையே தரக்கூடியதான புண்ணிய காரியங்களென்பவை கோடி எனப்படும் அளவுக்கு மிகுதியாகவே செய்து பலன் பெற்றவனாயினும்

சாயும் - தன் உயர்ந்த நிலைகளினின்றும் வீழ்ந்துவிட நேரிடும்

இதற்கு

நிலைப்பட்ட சான்றோர்க்கோர் தீங்கியற்றி - என்றும் நிலைத்திருக்கும் பேறுபெற்ற சப்த ரிஷிகள் எனப்படும் முனிவர்களுக்கு இழிவு ஏற்படும் படியான சொல் சொல்லியதன் காரணமாக

நீள்வான் தலைப்பட்டுச் சாய்நகுடன் சான்று - சொர்க்கத்திற்கு அதிபதியான இந்திர பதவி அடைந்தும் தன் நிலையைத் தங்கவைத்துக் கொள்ளத் தவறியவனான நகுடன் என்பவனே எடுத்துக்காட்டாகும்!

தெளிவுரை:

மலையத்தனை அளவுள்ள பஞ்சாகினும் ஒரே ஒரு சிறிய தீயின் பொறி பட நேர்ந்தால் முழுதும் எரிந்தழிந்து சாம்பலாகி விடுவதைப் போல, ஒருவன் செய்ய முடிந்த நல்ல பயன்களையே தரக்கூடியதான புண்ணிய காரியங்களென்பவை கோடி எனப்படும் அளவுக்கு மிகுதியாகவே செய்து பலன் பெற்றவனாயினும், தன் உயர்ந்த நிலைகளினின்றும் வீழ்ந்துவிட நேரிடும். இதற்கு நிலைப்பட்ட என்றும் நிலைத்திருக்கும் பேறுபெற்ற சப்த ரிஷிகள் எனப்படும் முனிவர்களுக்கு இழிவு ஏற்படும்படியான சொல் சொல்லியதன் காரணமாக சொர்க்கத்திற்கு அதிபதியான இந்திர பதவி அடைந்தும் தன் நிலையைத் தக்கவைத்துக் கொள்ளத் தவறியவனான நகுடன் என்பவனே எடுத்துக் காட்டாகும்!

குறிப்பு:

நகுடன் என்பவன் நகுஷன் என மகாபாரத்த்தில் குறிப்பிடப்படும் சந்திரவமிசத்தரசன். ஆயு என்பவனின் மகன்; நூறு அசுவமேத யாகங்களைச் செய்து இந்திர பதவி பெற்றவன். அப்பதவியின் மதிப்பு காரணமாக ஏழு (சப்தரிஷிகள்) முனிவர்கள் தூக்கிச் செல்லக்கூடிய பல்லக்கில் அமர்ந்து செல்லும் பேறு பெற்றிருந்தவன். ஆயினும் அவன் இந்திராணியைக் காண அவ்வாறாக முனிவர்கள் சுமந்து செல்லும் பொழுது, விரைந்து செல்லும்படி முனிவர்களைக் கடிந்து சொல்லியதன் விளைவாக, அவர்களில் ஒருவரான அகத்தியரால் சபிக்கப்பட்டு மலைப் பாம்பாகிப், பின்னொரு காலத்தில் தருமரால் சாபம் நீங்கப் பெற்றவன்.

இங்கு உயர்ந்த நிலையிலிருந்தும் செருக்கினால் மயங்கிப் பெரியோர்களை இகழ்ந்து சிறுமைப்பட நேர்ந்தவன் என்னும் காரணத்தால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளான்.

விளக்கவுரை: திரு.கா.எசேக்கியல்

குறிப்பு:

இன்னிசை இருநூறு என்ற இந்நூல் 200 இன்னிசை வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான்களில் ஒருவராகிய சோழவந்தான் திரு.அ.சண்முகம் பிள்ளையவர்கள் இயற்றியது.

இந்நூல் மதுரையில் விவேகபாநுப் பிரஸ் நடத்தி வந்த பத்திராதிபர் திரு. மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவரால் 01.07.1913 ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

இத்தளத்திலுள்ள நண்பர்கள் அனைவரும் இப்பாடலை வாசித்துப் பயன் பெறும்படியும், கருத்தளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

எழுதியவர் : அரசஞ் சண்முகனார் (25-Aug-15, 6:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 104

சிறந்த கட்டுரைகள்

மேலே