மாரடைப்பின் அறிகுறிகள் Heart Attack

நட்புறவுகளுக்கு வணக்கம்.

ஹார்ட் அட்டாக் என்னும் இந்த உயிரைக் குடிக்கும் நோயைப் பற்றி நான் கேள்விப்பட்டதை உங்களுடன் பகிர விரும்பி இந்தப் பதிவை இடுகிறேன்.
அதற்கு முன்.... நான் ஏன் இதை எழுத நினைத்தேன் என்பதைக் கூறிவிடுகிறேன்.

இங்கே கடந்த இரண்டு வாரமாக குளிர்கால விடுமுறை. இந்த இரண்டு வாரம் கழித்து திங்கள் மாலை குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வர சென்றிருந்தேன். அங்கே ஒரு குழந்தை தன் தாத்தாவுடன் வீட்டுக்குப் போக மாட்டேன் என்று அடம்பிடித்து அழுதுக்கொண்டு இருந்தது. அதன் ஆசிரியர் அந்தக் குழந்தையைச் சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.

பொதுவாக இப்படி சிறு குழந்தைகளின் பள்ளியில் நடப்பது தானே என்று நானும் வந்துவிட்டேன்.
பிறகு செவ்வாய் மாலையும் அந்தக் குழந்தை அழுதான். அந்தக் குழந்தையிடம்.... “உன் அம்மா இனி வரமாட்டாடா.... இனிமே நான் தான் வந்து உன்னை அழைச்சிக்கினு போவேன்....“ என்று அவனின் தாத்தா கெஞ்சி அழைத்தார். அவர் குரலும் உடைந்து இருந்தது.
நான் அப்போது தான் அந்தக் குழந்தையை உற்றுக் கவனித்தேன். தெரிந்த முகம் தான். அந்தக் குழந்தையை அதன் அம்மா தான் எப்போதும் அழைத்து வந்து விடுவாள். துருக்கி நாட்டு இஸ்லாமியப் பெண். என்ன ஒரு முப்பது வயது தான் இருக்கும். ஒல்லியாக இருப்பாள். முகம் மட்டுமே தெரிந்தாலும் அது வட்ட நிலைவைப் போல அழகாக இருக்கும். சாதாரணமாக நேருக்கு நேர் பார்த்தால் ஒரு சினேகிதப் புன்னகை உதிப்பாள். அவ்வளவு தான் எனக்குப் பழக்கம்.

அந்தப் பெண் இனி வரமாட்டாள்... என்றதும்.... நான் இன்றைய தலைமுறையினரை நினைத்து.... (அதாவது.... டைவர்ஸ்.... போன்ற பிரிவாக இருக்குமோ என்று) பேசாமல் வந்து விட்டேன்.
இருந்தாலும் என் மனம் உறுத்தியது. அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் மிகவும் அன்பாக இருப்பவள். இரண்டும் சின்ன குழந்தைகள்... இந்தக் குழந்தைகளைத் தவிக்க விடுவாளா... என்ற யோசனை.
அதனால் அவளுடன் மிகவும் சேர்ந்து பழகும் என் மற்றொரு தோழிக்குப் போன் செய்து விசாரித்தேன்.
அவள் சொன்னது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நன்றாகத் தான் இருந்தாளாம். இரண்டு நாட்களுக்கு முன், தன் கணவனிடம் உடம்பெல்லாம் வலிக்கிறது என்று சொல்லி இருக்கிறாள். அதற்காக வீட்டிலிருந்த வலி நிவாரண மாத்திரைகளைச் சாப்பிட்டும் இருக்கிறாள்.

மிகவும் சோர்வாக இருந்தாளாம். சரியாக சாப்பிடவில்லையாம். ஆனால் வீட்டு வேலை எல்லாவற்றையும் எப்போதும் போலவே செய்திருக்கிறாள்.

இரண்டு நாள் கழித்து இரவு நேரத்தில் தனக்கு மார்பில் அதிக வலி இருப்பதாகவும், மூச்சு விட சிரம்மாக இருப்பதாகவும் சொல்லவும் அவள் கணவன் அவளை அன்றிரவு மருத்துவமனை அர்ஜண்ட் வார்டுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். அங்கிருந்த டாக்டரிடம் அவளே தன் வலிகளைப் பற்றிச் சொல்லி இருக்கிறாள்.

டாக்டர் பரிசோதித்து விட்டு அவளை, “இன்றிரவு மருத்துவமனையில் தங்கட்டும். நாளை ஸ்பெசலிஸ்ட் வந்து பார்ப்பார்“ என்று சொல்லி எழுதிக் கொடுத்திருக்கிறார். இரவு நேரம் என்றதால் மருத்துவ மனையில் எந்த அறை என்று முடிவாவதற்குள், “குழந்தைகள் தனியாக துர்ங்குகிறார்கள். என் அம்மாவை அழைத்துக்கொண்டு போய் குழந்தைகளிடம் விட்டுவிட்டு நீங்கள் திரும்ப வாங்கள்“ என்று தன் கணவனை அனுப்பி விட்டாள்.

கணவரும் தன் வீட்டுக்குப் பக்கத்திலேயே வசிக்கும் தன் மாமியாருக்குப் போன் செய்து மனைவி சொன்னது போலவே செய்து விட்டு அரை மணி நேரத்தில் மருத்துவ மனை வந்திருக்கிறார். ஆனால் அதற்குள் அவர் மனைவி இறந்து விட்டாள்.
அவர் வெளியில் சென்றவுடன் அவளுக்கு வலி அதிகமாகி இருக்கிறது. டாக்டர்கள் முதல் உதவி செய்தும் அவளைப் பிழைக்க வைக்க முடியவில்லை. மாரடைப்பாம்.
என்ன கொடுமை இது!

இதைக் கேட்டதிலிருந்து மிகவும் கவலையாக இருந்தாலும்.... இது போலவே போன வருடம் என் கணவரின் மாமா ஒருத்தர். அவருக்கு வயது அறுபதுக்கு மேல். அவரிடம் இரவு எட்டு மணி இருக்கும். போனில் பேசினேன். “சற்று உடல் நிலை சரியில்லை அருணா“ என்றார்.
நான் “என்ன செய்கிறது அண்ணா?“ என்று கேட்டேன்.

“என்னவென்று தெரியவில்லை. உடம்பெல்லாம் வலிக்கிறது. சாப்பிடப் பிடிக்க வில்லை. தொண்டையில் ஏதோ சளி அடைத்துக் கொண்டு இருப்பது போல இருக்கிறது. ஒரே சோர்வாக இருக்கிறது“ என்றார்.

நானும், “நாளை வந்து பார்க்கிறேன்“ என்று சொல்லி போனை வைத்தேன். ஆனால் மறுநாள் அதிகாலை நான்கு மணியளவில் இறந்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சியைத் தந்தது.

அடுத்து
எங்கள் “கம்பன் கழக“ முன்னாள் செயளாலர் திரு. சிமோன் ஐயா அவர்கள்.... இரண்டு நாட்கள் சரியாக சாப்பிட வில்லை. சோர்வாக இருந்தார் என்று அவரின் துணைவியார் சொல்லி அழுத்தும் நினைவில் வந்தது.


இந்த மூன்று நிகழ்ச்சியையும் நினைவில் கொண்டு நான் என் அண்ணனுக்குப் போன் செய்தேன். என் அண்ணனுக்கும் ஹார்ட் அட்டாக் வந்து உடனடியாக அறுவை சிகிட்சை செய்து இப்போது நன்றாக இருக்கிறார்.

அவருக்குப் போன் செய்து, “உனக்கு ஹார்ட் அட்டாக் வருவதற்கு முன் எப்படி இருந்தது?“ என்று கேட்டேன். அவரும் “இரண்டு நாளாக சோர்வாக இருந்தது. சாப்பிடப் பிடிக்க வில்லை. தொண்டையில் ஏதோ அடைப்பு போல இருந்தது“ என்றார். ஆனால் “கடைசி நேரத்தில் தான் மூச்சு விட மிகவும் சிரமமாக இருந்தது. அதிகமாக வேர்த்தது. சொல்ல முடியாத வலி மார்பில். அந்த வேதனை யாருக்கும் வரக்கூடாது...“ என்று சொன்னார்.

நட்புறவுகளே....

மாரடைப்பு என்றால்.... சினிமாவில் காட்டுவது போல் சட்டென்று வந்துவிடுவதல்ல. அதன் அறிகுறி இரண்டு நாட்களுக்கு முன்பே தெரிகிறது. அதை அலட்சியப் படுத்திவிட்டால் கடைசியில் அனைவரையும் அவதிப்படுத்த வைத்து விடுகிறது.
அதனால்.... சாதாரணமாக இருக்கும் போது உடம்பு அதிகமாக வலித்தாலோ, காரணமின்றி அதிக சோர்வு இருந்தாலோ, தொண்டையில் சளி போன்றோ அல்லது கற்று போன்றோ (ஏப்பம் வருவது போல்...) இருந்தாலும், மூச்சு விட சிரம்மாக இருந்தாலும், அதிகமாக வேர்த்தாலும்.... அதை அலட்சியமாக விடாமல் உடனடியாக தகுந்த மருத்தவரை கலந்து ஆலோசித்து நலம் பெறுங்கள்.

அன்புடன்
அருணா செல்வம்.

எழுதியவர் : அருணா செல்வம். (26-Aug-15, 3:13 pm)
பார்வை : 109

மேலே