“மருத்துவ அரசியல்”
வணக்கம் !
“மருத்துவ அரசியல்” இது நேற்றிரவு நான் படித்த ஓர் புத்தகத்தின் பெயர். அப்படியென்ன இருக்கப் போகிறது இதில் என்ற ஓர் கண்ணோட்டத்தில் தான் இந்த நூலை திறந்தேன். அதன் பிறகு படித்து முடிக்கும் வரை மூடவும் இல்லை என் கவனமும் சிதறவில்லை.
ஓர் திரைபடத்தின் கடைசிநேர காட்சிகள் எப்படி மனதை மூழ்க செய்யுமோ அப்படி மூழ்க செய்துவிட்டது இந்த புத்தகம். ஆனால் இது முழுக்க முழுக்க வேதனையும் சோகமும் கோபமும் நிறைந்த மூழ்கல்.
உயிர் ஒன்றுதான் மனிதனால் செயற்கையாக உருவாக்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. அப்பேற்பட்ட உயிரை காக்கவா இன்றைய மருத்துவமனைகளோ மருத்துவர்களோ மருந்தகங்களோ இருக்கின்றன ? ஆம் என்று யாரவது சொன்னால் தயவுசெய்து “மருத்துவ அரசியல்” என்ற இந்நூலை ஒருமுறை படித்துவிட்டு சொல்லுங்கள் பார்ப்போம். நிச்சயம் உங்களால் சொல்ல இயலாது. இதில் மற்றொரு கொடுமை என்னத் தெரியுமா நமது மத்திய மாநில அரசுகளும் அரசியல்வாதிகளும் உலக சுகாதார அமைப்புகளும் இந்த சதியின் முதுகெலும்பாக இருப்பதுதான்.
இந்தியா நோய்கள் விற்கப்படும் நாடு, இந்திய ஏழை மனித எலிகளே பரிசோதனைக் கூடு. வறுமைக்காக உடலுறுப்புகள் விற்கப்படுவது ஒருபுறம், வயிற்றுவலி என மருத்துவமனைக்கு செல்லும் ஏழைக்கு தெரியாமலே அவரது உடலுறுப்புகளை திருடுவது ஒருபுறம். புதைக்கப்பட்ட பிணத்தையும் எரியும் பிணங்களை எலும்புக்காக திருடுவது இப்படி அதிர்ச்சியான பல தகவல்கள் இந்நூலின் வாயிலாக அறியமுடிகிறது.
குறிப்பாக நோய் இல்லாதவர்களுக்கு கூட நோய் உண்டாக்குவது, தங்களின் புதிய மருந்துகளின் சோதனைக்கு ஏழை நோயாளிகளை பயன்படுதிகொள்ளுதல் என மருத்துவத் துறையின் மோசமான செயல்பாடு நீண்டுகொண்டே போகிறது. இதன் மூலம் பல ஆயிரம் கோடி வியாபாரம் நிகழ்வது கண்கூடாக தெரிகிறது.
இந்த நூலை படித்ததன் மூலம் ஒன்று தோன்றுகிறது ஓர் ஏழை நோயுடன் கூட நீண்ட நாட்கள் வாழ்ந்திடலாம், ஆனால் நோயென மருத்துவரிடம் சென்றால் அந்த உயிருக்கு உத்திரவாதம் இல்லை அல்லது விரவில் மரணம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
நண்பர்கள் அனைவரும் கட்டாயம் இந்நூலை படிக்கவும். கீழைக் காற்று பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இதன் மூலம் எளிதாக உணரமுடிகிறது.
(செந்தில்குமார் செயக்கொடி)