மூன்று பொம்மைகள் - சந்தோஷ்

மூன்று பொம்மைகள்
*********************************************
என் குட்டிப்பாப்பா
கேட்டுவிட்டாளே என்பதற்காகவே
மூன்றுவிதமான பொம்மைகளாக....
கழுத்தில் ருத்திராட்சையுடன்
நெற்றியில் விபூதி பூசிய பொம்மையும்
மார்பில் சிலுவைத் தொங்கிய
கிறிஸ்துவச் சிறுவன் பொம்மையும்
தலையில் குல்லா அணிந்தவாறு
தாடி வளர்த்த ஒரு பொம்மையும்
வாங்கிக்கொடுத்துவிட்டேன்.
ருத்திராட்சை கழுற்றி
குல்லா வைத்த பொம்மைக்கு மாட்டி...
தாடி வைத்த பொம்மையிலிருந்து
குல்லாவை எடுத்து
கிறிஸ்துவ பொம்மைக்கும்,
கிறிஸ்துவ சிலுவையை கழுட்டி
விபூதிப் பூசிய பொம்மைக்கும்
மாற்றி மாற்றி
மாட்டி மாட்டி
விளையாடிய என் செல்லக்குட்டியிடம்
“குட்டிம்மா என்னடா செய்ற? “ என்றேன்.
ஒரு தெய்வீகப் புன்னகையை மட்டும்
பதிலளித்து விட்டு
பொம்மைகளை சேர்த்து விளையாடிக்கொண்டிருந்தாள்.

இந்து, கிறிஸ்து, இஸ்லாமிய பொம்மைகள்
என்பதாக
பிரித்துப்பார்க்கும் குணமுடைய எனக்கு
இறுதியாக புரிந்தது....

பொம்மைகளிடம் அன்புச்செலுத்தும்
என் குழந்தை தெய்வத்திடம்
மதங்கள்
தோற்றுக்கொண்டே மாண்டுகொண்டிருப்பதாக..!




***
-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (26-Aug-15, 7:09 pm)
பார்வை : 203

மேலே