கணவனே நீ என் தாயுமானவனே
நம் வாழ்வின் நன்னாள் ஒன்றில்
நட்பும் உறவும் சூழ
நீ என்னைப் பெண் பார்க்க வந்தாய்...
ஒரு சாயலில் கவிஞர் பாரதியையும்
ஒரு சாயலில் நடிகர் சூரியாவையும்
கலந்தவர் உன் பிராணநாதர் என்று
தோழிகள் என் நாணத்தைக் கிள்ள..
பாதம் பார்த்து நடந்து வந்த என்னை
நீ பார்த்த அந்த முதல் பார்வையில்
நான் உன்னைக் கண்டது
காதல் ததும்பும் என் கணவராய் மட்டுமே...!!
அதிகம் பேசினால்
ஆர்வம் போய்விடும்
என்ற என் பாட்டியின்
சொல்லைக் கேட்டு...
நம் மண நாள் வரை,
உன்னைப் பற்றி நானும்
என்னைப் பற்றி நீயும்
நாம் அறிந்திருந்தது
நம் இருவருக்கும் பிடித்த நிறம் "வான் நீலம்"
என்பதை மட்டும் தானே....!!
தேவதைகள் குறித்திட்ட சுப நாளில்
நீ கட்டிய தாலி என் நெஞ்சிலே
காதலாய் வருடிட...
என் அப்பா வாங்கித்தந்த
என் கல்யாணக் கொலுசுகள்
அமைதியாய் அழுதன ஏனோ...!!
தங்களின் உயிரை அதன் ஜீவனோடு
சேர்த்திட்ட திகழச்சியில்
என் பிறந்த உலகம்
ஆனந்தக் கண்ணீரில் தத்தளித்தது...!!
நான் வேர்விட்ட இடத்தை விட்டு
என்னை அள்ளி வந்த நீ
நம் புதுப் பூக்கள் மலர்ந்திடும்
நம் சொர்க இல்லத்திலே
மெதுவாய் என்னை நட்டுவைத்து
நாளும் உன் காதல் நீரூற்றினாய்...!!
ஒவ்வொரு நொடியையும்
ஆகச் சிறந்த தருணங்களாய்
மாற்றிடும் உன்னிடம் நான் கேட்பது
உன் காதல் மட்டும் தான் - ஆனால்
தினம் நூறு வரம் தந்திடும் நீ
குற்றமில்லா என் குலசாமி தான்...!!
என் தாயிடம் மட்டுமே பகிர்ந்திருந்த
என் பிறப்பின் வலியை...
உன்னிடம் பகிர்ந்த அந்த தருணத்திலே
வளர்ந்த குமரி நான் மாறிப்போனேன்
மீண்டும் ஒரு குழந்தையாய்...!!
உன்னை என் வரமாய்ப் பெற
நான் என்ன தவம் செய்தனை
என் தாயுமானவனே......!!!
~ தப்தி செல்வராஜ், சாத்தூர்