உபரி

அனிச்சையாய் ஆதிப்பொதுமைச்
சமூகம் கண்டெடுத்த
விதை!
விதையை சோதிக்க,
விளைநிலமொன்றில் விதைத்து
வேளாண்மை சிறப்பாய்
செய்யப்பட்டது.
செய்தவன் ஆதிமனிதன் என்பவன்
செயலின் விளைநிலம் தாய்வழிச் சமூகம் எனப்பட்டது
செயலுக்கு கடவுளும் கலைகளும்
உரங்களானது...!
உரங்கள் நஞ்சானதால்
விதையும் வீரியம் இழந்து,
நிலமும் பாழானது!!
பாழான நிலத்தில்
நல்லப் பயிரா
முளைக்கும்??
நச்சுச் செடியே
கொழிக்கும்!
கொழித்து செழித்த
அச்செடியே
தந்தைவழிச் சமூக
முறைமையானது!!
முறையை வழுவாது
முறையாய் வார்க்க தோன்றிய
முறையே கற்பு எனப்பட்ட
கற்பிதமானது...!
கற்பிதத்தால் பெண்ணானவள்
பிறப்பால் பெற்றவனுக்கும்
வளர்ப்பால் தமையனுக்கும்
வயது வந்தால் கணவனுக்கும்
வயது போனால் பெற்று எடுத்தவனுக்கும்
வாழப் பழக்கப்பட்டு
வாழ்கிறாள் ஓர்
அடிமையாய்!
அடிமைச் சமூக மூப்பாட்டனுக்கு
முதலாளித்துவ சமூக பெயரன்
ஜனித்த இச்சூழலிலும்!
இச்சூழல் மாறுமா??
மாறும். பின்னொரு நாள் மாறும்...
மாற்றமடைந்த அந்த சமூகத்தில்
நிச்சயமாய் இருக்காது
பெண்ணுக்கான கற்பிதங்களும்!!
தனிமனித உபரிகளும்!!!