28-08-15 காளியப்பன் கவியும் கன்னியப்பன் உரையும்---08
08..காளியப்பன் கவியும் கன்னியப்பன் உரையும்
இன்சுவைத் தேனுண் டிரைகின்ற வண்டுகளின்
பின்வரு கின்ற பிடிகள்போல்-முன்வரும்
வேட்பாளர் கண்டு மயங்காதே! தொண்டுசெயும்
நோக்காளர் கண்டளிப்பாய் வாக்கு!
பதவுரை:
இன்சுவைத் தேனுண்டு= இனிமையான சுவையை உடைய தேனினை
உண்டுவிட்டு
இரைகின்ற வண்டுகளின்=ஒலியெழுப்பியவண்ணமிருக்கும்
வண்டினங்களின்
பின்வரு கின்ற =ஓசையினைக் கேட்டனவாக அதன் பின்னே
செல்லும்
பிடிகள்போல் =பெண்யானைகளைப் போல
முன்வரும் = ( தேர்தலுக்கான உற்சாக ஒலியெழுப்பும்)
உங்களுக்கு முன்னல் வருகின்ற
வேட்பாளர் கண்டு =வாக்குகள் பெறவரும் வேட்பாளர்களைப்
பார்த்து
மயங்காதே! =(இலவசமென்னும் தேன் பெறப்போகிறோம்
என்று)மயக்கம் கொள்ளாதே!
தொண்டுசெயும் =(மக்களாகிய உங்களுக்கான) ஊழியத்தைச்
செய்ய வருகின்ற
நோக்காளர் =(உண்மையான) எண்ணம் கொண்டவர்கள்
கண்டளிப்பாய் வாக்கு! =என்று ஆய்ந்தறிந்து உனது வாக்கினை
அளிப்பாயாக!
விளக்கவுரை:(Dr .கன்னியப்பன்)
இனிய சுவையுள்ள தேனை உண்டு இன்பம் பெற்றுப் பாடுகின்ற வண்டுகளின் பின் வருகின்ற பெண் யானைகளைப் போல, முதலில் முந்தி வரும் பணபலம், ஆள் பலம் மிகுந்த அரசியல்வாதிகளைப் பார்த்து (பயந்து), பொருளுக்கு ஆசைப்பட்டு உன் வாக்கை கொடுத்து விடாதே! மக்களுக்கு வேண்டிய நல்ல தொண்டுகளைச் செய்யும் தகுதியுள்ள வேட்பாளரைத் தெரிந்து வாக்களிக்க வேண்டும் நீ! என்று இப்பாடலாசிரியர் அறிவுறுத்துகிறார்.
===