வேருக்குள் விழுந்த விதை

வேருக்குள் விழுந்த விதை
=============================
நதியலையின் விழுநிலையின் இமய வரம்பின் வரை
அந்த தவளை தாவலின் உச்சம்
பூவிட்டுப் பார்த்து ஆழம் சொல்லவேண்டும்
சாரலின் இடையில் சிகரம் தாண்டவேண்டும்
கனம் சுமந்து உயிர் சிரகாகிறது
அழகான ஒழுகலின் நிமிடங்களுக்கு
பல் முளைத்து மீண்டும்
வரச்சொல்லி அழைக்க அவை ஈரமாகின்றன
மின்னார்வம் காட்டிக்கொண்டிருந்த
ஏதோ ஓர் உடலுக்குள்
சிறையாகிவிட்டு
அடைப்பிட்டிருக்கலாம்
குலைநாடி துடிப்புகள் அதிகரிக்க அதிகரிக்க
நிர்மலம் துணையிருந்தது
வெட்கம் தரும் பிரதேசமெல்லாம்
மயிர்க்கொத்த
பள்ளம் செய்துக்கொண்டிருக்கலாம்
குளியலறை வாளியின்
இளநீர் சொட்டலும்
சுவர் கடிகாரத்தின் டிக் டிக் சத்தமும்
கொஞ்சம் தள்ளிப் போயிருந்திருக்கலாம்
பூவா தலையா போட்டுப்பார்த்து போட்டுப்பார்த்து
பற்றாக்குறை நேரங்களை
அவள் கோபப்பட
முன்னேற்றிக் கொண்டிருந்தேன்
அப்போதுதான்
இருள் சொரிந்ததும் குளுருது என்பாள்
மனிதனின் மூச்சுக் காற்று
யாரும் யூகிக்க முடியாத
எப்படிப்பட்ட எரிபொருள் தெரியுமா
"இத்தனை இதமாக சிதையேற்றி யிருந்தால்
சீதை எத்தனை முறை
இஷ்ட்டப்பட்டு தீக்குளித்திருப்பாளோ
ராமன் ,,,ஒரு ,,,அக்மார்க் லூசுப்பயல்தான்"
கரைசேர வேண்டுமா வேண்டாமா
என்ற கரங்களுக்கு
பலத்தை மிகைப்படுத்தி
நீந்தக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கும்
ஏமாற்றுவேலைக்கிடையில்
அவள் சொல்லும்
ஒவ்வொரு போடாவிற்குள்ளும் விழும்
என் சிரிப்பு சத்தங்களால்
போதையாகிக் கொண்டிருந்தாள்
கிளைகளின் வெம்மைத் தளர்த்தி
பனிச்சாரல்கள்
துளித் துளியாக
வேருக்குள் விதை பெய்துக் கொண்டிருந்தன
போதாத கனவுகளுக்குள்
என்னிலிருந்து விரிந்தபூக்களால்
விரும்பிய நிறங்களை
நிரப்பிவிட்டேனா
முனகல்களின் காலாவதி
முழங்கால்களின்மேலே
முகம் சாய அழைக்கிறது வா
அனுசரன்