ஆசிரிய வருத்தம்

என் ஆசிரியர்களுக்கு,

உங்களில் பலருக்கு
என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பதில் தெரிந்தாலும்
உங்கள் கேள்விகளுக்கு
என்றுமே நான் எழுந்து
பதில் சொன்னதில்லை.

அது ஏனோ
நீங்கள் என்னைக் கேட்ட
கேள்விகளுக்கு மட்டும்
பதில் தெரிந்ததில்லை.

முதல் வரிசை
முந்திரி கொட்டைகள்
பின்வரிசை ‘பெரிய பையன்கள்’
இரண்டிலும் சேராதவன் நான்.

இரண்டாம் வரிசையில் என் இருக்கை.

அதனால் உங்களுக்கு என்னை
அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று
ஒருசில உண்மைகளை
உங்களிடம் சொல்ல விழைகிறேன்.

அந்த பச்சை நிற வாளியை உடைத்தது
அபராதம் கட்டிய ஐந்து பேருமில்லை.
ஐந்தில் வளையாத நான் மட்டும் தான்.

அதற்குப் பிராயச்சித்தமாக
நண்பன் திருடிய பேனாவுக்கு
நானும் அடி வாங்க நேர்ந்தது.

உண்மையில் என் நாலு கோடு நோட்டு
காணமல் போகவில்லை.
வீட்டுப் பாடம் எழுதாததால்
பொய் சொல்லி விட்டேன்.

அமுக்கன், அறுவை, தூக்க மாத்திரை
இடி அமீன் என்றெல்லாம்
உங்களுக்குப் பட்டப் பெயர் வைத்தது
நான் தான்.

கணக்கு வாத்தியாருக்கு மட்டும்
ஏற்கனவே யாரோ பேர் வைத்துவிட்டனர்.

தமிழாசிரியரின் வெள்ளைச் சட்டையில்
கருப்பு மை அடித்தது நான் தான்.

உணவு இடைவேளையில்
உங்களில் சிலர்போல் நான்
நடித்துக் காட்டியது
நிஜம்தான்.

கை தட்டல்களினால் என்
கண்ணியம் குறைந்துவிட்டது.

நீங்கள் சொன்ன எல்லாமே
என் மண்டையில் ஏறவில்லை தான்.

ஆனால் மனதின் ஒரு மூலையில்
மரியாதை இருக்கத்தான் செய்தது.

நீங்கள் கழுவிய மீன்களில்
நழுவிய மீனாய்
நானும் தேர்ச்சிபெற நேர்ந்தது

என் தவறுகளை நீங்கள்
எப்போதும் போல மன்னிப்பீர்கள்.

இருப்பினும்
இவற்றைச் சொல்வதால் நான்
மீண்டும் என் பள்ளிக்கூட நாட்களுக்கு
திரும்ப முடிந்தது

உங்கள் மாணவனாக….

எழுதியவர் : செல்வமணி (வலையிலிருந்து) (31-Aug-15, 6:44 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : aasiriya varuththam
பார்வை : 75

சிறந்த நகைச்சுவைகள்

மேலே