எங்கே அந்த சந்தோஷங்கள்
சிக்கெடுத்து சீப்பில் சிக்கிய
தலைமுடிகளைச் சுருட்டி
சீமை ஓடுகளுக்குள்
சொருகி வைப்பாள் அம்மா
ஒரு நாள் அந்த சீமை ஓடுகள்
முடி இழந்து தவித்த போது
நானும் தவித்தேன்
அப்போதெல்லாம்
முடிகள் உதிர்வது பற்றிய
எண்ணமில்லை எனக்கு
ஊருக்குச் செல்லும்
போதெல்லாம்
உடன்பிறப்புக்களுடன்
சண்டை போட்டு
ஜன்னல் ஓரம் அமர்கையில்
முகத்தில் அறையும் காற்றும்
பின்னே விரையும் காட்சிகளும்
என்னைப் பரவசப் படுத்தியதுண்டு
அப்போதெல்லாம்
சாலைகளில் நடக்கின்ற
விபத்துக்கள் பற்றிய
விழிப்புணர்வு கிடையாது எனக்கு
தேக்கு மர ஊஞ்சலில் படுத்து
அம்மா ஆட்டுவிக்கையில்
உயரத்தில் எழும்பும்
சத்தத்தைக் கேட்டு உற்சாகமடைவேன்
அப்போதெல்லாம்
ஊஞ்சலின் நியதி போல்
வருவது பிறப்பென்றும்
போவது இறப்பென்றும் பற்றிய
பிரபஞ்சவிதிகள் தெரியாது எனக்கு
நண்பன் ஜெகதீசனோடு அடிக்கடி
காய்விட்டு வருந்தி வருந்தி பின்
பழம் விட்டு சந்தோஷப் படுவேன்
ஒரு நாள் அவன் கிணற்றில் மூழ்கி
இறந்த போது துக்கப் பட்டேன்
இன்னொரு ஜெகதீசன் வரும் வரை
அப்போதெல்லாம்
நண்பர்கள் சாகலாம் ஆனால்
நட்பு சாகாது என்ற நிதரிசனம்
தெரியவில்லை எனக்கு
அப்போதெல்லாம்
பூக்களுக்கு அழகும் வாசமும்
மட்டுமே உண்டு என்று தெரிந்த எனக்கு
மனைவிக்கு வைத்தால் நேசம் என்றும்
மகளுக்கு வைத்தால் பாசம் என்றும்
கடவுளுக்கு வைத்தால் பக்தி என்றும்
இறந்தவருக்கு வைத்தால் சோகம் என்றும்
சொல்லத் தெரியவில்லை எனக்கு
அன்றெல்லாம் இப்படி
எத்தனையோ நிகழ்வுகள்
எல்லாமே சந்தோஷங்கள்
இன்றெல்லாம் கூட
எத்தனையோ நிகழ்வுகள்
எங்கே அந்த சந்தோஷங்கள்?