நான் இழப்பவை…
காலை செய்தித்தாள்
வாயாடி பண்பலை வானொலி
வெள்ளிக்கிழமை சாயங்காலக்
கோயில் ஒலிபெருக்கி
தேர் திருவிழாவில்
மாடிப் பெண்கள்
முதல் நாள் முதல் காட்சி நெரிசல்
கன்னி கழியாத தேர்தல் வாக்குறுதிகள்
பழைய காகிதத்துக்கு மாம்பழம்
பக்கத்து ஊருடன் பந்தயக் கிரிக்கெட்
நேற்றைய மழையின் காளான் தேடல்
நள்ளிரவில்
தானாக ஊளையிட்ட
வங்கி அலாரம்
சில்லரை கேட்டு
சத்தம போடும் நடத்துனர்
மகளிர் இருக்கைக்குப் போராடும் உரிமைவாதிகள்
அவசர ஊர்தியைத் துரத்தும்
இருசக்கர ஆசாமிகள்
தண்டீஸ்வர வீதியில் சந்தன வாசனை
சாலையோர புளியமர நிழலில் தர்பூசணி
கரவொலி கேட்கும் வரை நில்லாத
தொலைக்காட்சித் தர்க்கங்கள்
நன்கொடை கேட்டு கதவு தட்டல்கள்
படிக்கட்டில் தொங்கல் பயணம்
டீக்கடை அரசியல்
வாழை இலையில்
ஆந்திர மதிய உணவு
உதட்டுச் சாயம் வழியாக
ஆங்கிலக் கலப்புத் தமிழ்
இறுதி ஊர்வல நடனங்கள்
இரண்டாம் ஆட்டம் முடிந்து வருகையில்
நாய்களின் துரத்தல்
சுதந்திர தினக் கவிதைகள்
தீபாவளிப் பட்டிமன்றங்கள்
கழிப்பிடக் கெட்ட வார்த்தைகள்
கடற்கரைக் காதலர்கள்
தெண்டுல்கர் மீதான திட்டல்கள்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள்
எந்த வானிலை அறிக்கையிலும்
வராத மழைகள்
வீட்டுப் பின்புறம் மலர்ந்த
திடீர் பூக்கள்
போர்வையைப் பகிர்ந்திடும்
செல்லப் பூனைக்குட்டி
அம்மா அடுக்கிக் கொண்டே போகும்
அழகு தோசைகள்
புறப்படும் நாட்களில்
அப்பாவுடன் உரையாடல்கள்
இனிய தமிழ் பாடல்கள்
மற்றும் நீ…