சிறுகதையின் வரையறை

சிறுகதை என்கிற இலக்கிய வடிவம் நமக்கு மேற்கிலிருந்து கிடைத்தாலும், இன்று அதனுடைய பங்கு தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. சிறுகதை இல்லாத தமிழ் இலக்கியத்தை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

சரி. சிறுகதையின் வரையறைதான் என்ன?

ஒரு நிகழ்வு அல்லது துணுக்குச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு நறுக்குத் தெரித்த மாதிரியான விவரிப்பில் ஒரு உச்சத்தைத் தொட்டு, சில நூறுகளிலிருந்து சுமார் எட்டாயிரம் வார்த்தைகள் வரை எழுதப்படும் உரைநடைதான் சிறுகதை. கையாளும் கருப்பொருளோடு தேவையான உணர்ச்சிகளை இரண்டு, மூன்று நிகழ்ச்சிகளில் சித்தரித்து, கருவுக்கு ஏற்ற விதத்தில் உச்சத்தைப் பளீரென்றோ அல்லது பூடகமாக மென்மையாகவோ எழுதி சிறுகதையை முடிப்பது - பல வருஷங்களாக எல்லா நாட்டுப் படைப்பாளிகளாலும் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கம்.

என்று சொல்லப்படுகிறது.

அல்லது

ஆரம்பம், முடிவு, உச்சம் என்ற எதுவும் அறுதியிடப்படாமல், ஏன்.. எந்தக் குறிப்பிட்ட நிகழ்வும் கூட இல்லாமல், ஒரு சிறந்த சிறுகதை சாத்தியம்தான்

என்றும் சொல்லப்படுகிறது.


O

தமிழின் முதல் சிறுகதை, வ.வே.சு ஐயர் எழுதிய (1915) குளத்தங்கரை அரசமரம் என்று சொல்லப்படுகிறது. அதிலிருந்து புதுமைப்பித்தன், கு.ப.ரா, தி.ஐ¡னகிராமன், அசோகமித்திரன், லா.ச.ரா., சா.கந்தசாமி, ¦ஐயகாந்தன், ஆதவன், சுஜாதா, நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன், ஜெயந்தன், இந்திரா பார்த்தசாரதி, பாலகுமாரன், மாலன், இரா.முருகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோபி கிருஷ்ணன், இன்றைய படைப்பாளிகளான அழகிய பெரியவன், பெருமாள் முருகன், ஜே.பி. சாணக்யா, ஆதவன் தீட்சண்யா போன்ற பல இலக்கிய ஜாம்பவான்களால் சிறுகதை என்கிற தேர் மெல்ல மெல்ல இழுத்து வரப்பட்டிருக்கிறது.

இதில் எனக்குப் பிடித்த சிறுகதைகளைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் 'எனக்குப் பிடித்த சிறுகதைகள்' என்கிறதொரு தொடர் எழுதலாமென்றிருக்கிறேன்.

இதில் படைப்பாளிகளின் எந்த கால, தர வரிசையோ இருக்காது. மூத்த படைப்பாளியா, இளைய படைப்பாளியா, பிரசுரமானது சிற்றிதழ்களிலா, வெகுஜன இதழ்களிலா? இணையத்தளங்களிலா என்கிற எந்த பாகுபாடும் கிடையாது. எனக்குப் பிடித்த சிறுகதை என்கிற ஒரே தகுதிதான்.

இது உங்களுக்குப் பயனுள்ளதாகவும், சுவாரசியமானதாகவுமிருக்கும் என நம்புகிறேன். காத்திருங்கள்.

பகிர்வது: செல்வமணி, படைத்தது - சுரேஷ் கண்ணன்

எழுதியவர் : நன்றி: வலைத்தளம் : பகிர்வத (31-Aug-15, 11:47 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 468

மேலே