பிரமிள் கவிதைகள்

தமிழில் வசன கவிதை என்னும் பெயரில் தொடங்கிப் புதுக்கவிதை என்னும் பெயரில் நடந்த ஓர் இயக்கத்தில் 'எழுத்து' பத்திரிகையில் எழுத ஆரம்பித்து 1997 வரை தீவிரமாகச் செயல்பட்டவர் 'பிரமிள்'. புதுக்கவிதையில் படிமங்களை அதிகமாக உபயோகிக்கத் தொடங்கியவராக அறியப்பட்டுப் 'படிமக் கவிஞர்' என்று சொல்லப்பட்டார். தமிழ்ப் புதுக்கவிதையில் புதிய பாடுபொருள்களைச் சேர்த்துச் செயல்முறையில் புதுமையைச் செய்து இயற்பியல், வானியல் போன்ற அறிவுத் துறைகளின் விவாதங்களை நவீன இலக்கியத்திற்குள் கொண்டுவந்து இலக்கியத்திற்கு முன்னடையாக நாம் சேர்த்துக் கொண்ட நவீனம் என்னும் சொல்லுக்கு நியாயம் செய்தவர் பிரமிள்.
பிரமிள் கவிதைகள் என்னும் தலைப்பில் வெளியாகியுள்ள தொகுப்பில் முதல் கவிதையாக வெளியிடப்பட்டுள்ள 'நான்' எனும் தலைப்பிலுள்ள கவிதையைப் பார்ப்போம்.

ஆரீன்றாள் என்னை?
பாரீன்று பாரிடத்தே
பாரீன்று உயிர்க்குலத்தின்
வேரீன்று வெறும்வெளியில்
ஒன்றுமற்ற பாழ்நிறைத்து
உருளுகின்ற கோளமெலாம்
அன்று பெற்று விட்டவளென்
தாய்!

வீடெதுவோ எந்தனுக்கு?
ஆடும் அரன் தீவிழியால்
மூடியெரித்துயிரறுத்த
காடு ஒத்துப் பேய்களன்றி
ஆருமற்ற சூனியமாய்
தளமற்ற பெருவெளியாய்
கூரையற்று நிற்பது என்
இல்!

யாரோ நான்? - ஓ! ஓ! -
யாரோ நான் என்றதற்கு
குரல் மண்டிப் போனதென்ன?
தேறாத சிந்தனையும்
மூளாது விட்டதென்ன?
மறந்த பதில் தேடியின்னும்
இருள் முனகும் பாதையிலே
பிறந்திறந்து ஓடுவதோ
நான்!

கவிதையின் முதல் பத்தியில் தனது தாயைப் பற்றிச் சொல்லப்படுகிறது; இரண்டாம் பத்தியில் நானுடைய இருப்பிடத்தைப் பற்றிச் சொல்லப்படுகிறது. மூன்றாம் பத்தியில் மனித விசாரணையின் ஆதிக் கேள்வியான நான் யாரென்ற கேள்வி கேட்கப்படுகிறது. மூன்று பத்திகளிலும் முதல் வரியில் கேள்வி கேட்கப்பட்டுத் தொடர்ந்து வரும் வரிகளில் பதில் வருகிறது. முதல் இரண்டு பத்திகளிலும் தீர்மானமான பதில் வருகிறது. மூன்றாம் பத்தியிலுள்ள கேள்விக்கு மற்றொரு கேள்வி, பதிலாக வைக்கப்படுகிறது. பதிலில்லை என்னும் பதில் முன்வைக்கப்படுகிறது.

யாரிந்த நான்? யாரிவர் தாய்? எங்கிருந்து வந்தவர் இவர்? பாரும் ஊரும் வேரும் ஈன்றவள். சரி, எல்லாத் தாய்களும் குழ்ந்தை பெற்றுக் கொள்ளும் போது ஏதோ ஓர் இடத்தில், ஏதோ ஓர் ஊரில்தான் இருக்கிறார்கள் . ஒரு குழந்தை பிறந்தவுடன் இந்த இனக்குழுவைச் சேர்ந்த இன்னார் குழந்தை என்ற வேரும் அந்தக் குழந்தையின் புலன்கள் இயங்கத் தொடங்கியவுடன் அதற்கொரு உலகமும் கிடைத்துவிடுகிறது. ஆனால், இந்தக் கவிதையில் வரும் தாய், வம்சவிருத்தி செய்யும் தாய்தானா? இவள் பார் படைத்தவள், பாரில் ஊர் சமைத்தவள். உயிர்க் குலத்தின் வேரை ஈன்றவள். உபயோகமுள்ளது, உபயோகமற்றது எனப் பல பொருள்களையும் வாங்கிப் போட்டு நாம் வீட்டை அடைப்பதுபோல், வெறும் வெளியில் ஒன்றுமற்ற பாழை நிறைப்பதற்காக உருளுகின்ற கோளமெல்லாம் பெற்றுவிட்டவள் இந்தத் தாய். 'அதுவும் அன்று பெற்றுவிட்டவளென் தாய்' என்று வருகின்றது. இந்த அன்று என்றென்பதற்கு விஞ்ஞானத் திடமே இன்றும் அறுதியான பதிலில்லை.

இவருடைய இருப்பிடம் எது? சிவன் தனது தீக்கண்களால் எரித்துக் கொன்ற சுடுகாட்டை ஒத்த இடம். ஆனால், பேய்களற்றுக் கூரையின்றித் தளமுமின்றிப் பெருவெளியாக நிற்கிற யாருமற்ற சூனியம்தான் இவருடைய இருப்பிடம்.

மூன்றாம் பத்தியில் நான் யார் என்னும் கதறலுக்குப் பதில் வரவில்லை. குரல் மண்டிப்போய்விட்டதால் குரல் வரவில்லை. உருப்படாத சிந்தையும் மூளவில்லை. பதில் தேடி இருண்ட பாதையில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நான் பல காலமாகப் பிறந்து இறந்து ஓடிக்கொண்டிருக்கிறான். ஓடிக்கொண்டிருக்கிறான் என்று சொல்லும்போது அவன் ஒற்றை ஆள் அல்ல; அறியாததன் இருண்ட பாதையில் காலங்காலமாக ஓடிக்கொண்டிருக்கும் மனிதன் என்று வேண்டுமானால் சொல்லலாம். அல்ல, கேள்விதான் ஓடுகிறது. இப்படிக் காலங்காலமாக அகத்திலும் காலாதீதத்திலும் ஓடும் கேள்விக்கான பதில் மனிதச் சிந்தனை என்னும் அறிவு மட்டத்தில் கிடைப்பதில்லை என்றெல்லாம் கொள்ளலாம்.

இப்படியான கேள்விகளுக்குப் பதிலுள்ளதா என்றால் உள்ளது. மறந்த பதிலைத் தேடித்தான் இந்த ஓட்டம். அதைத் தேடி இருண்ட பாதைகளில் ஓடிக்கொண்டிருப்பவன் இந்த நான். இவனது தாயோ அகிலத்தையும் அண்டத்தையும் பெற்றுவிட்டவள். இருப்பிடம் கூரையற்றுத் தரையுமற்ற பெருவெளி.


பிரமிள் 'படிமக் கவிஞர்' என்று வழங்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த சில கவிதைகளில் ஒன்று,

ககனப் பறவை
நீட்டும் அலகு
கதிரோன் நிலத்தில்
எறியும் பார்வை
கடலுள் வழியும்
அமிர்தத் தாரை
கடவுள் ஊன்றும்
செங்கோல்

இது 'மின்னல்' எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதை. வெவ்வேறு வகையான நான்கு படிமங்களால் மின்னல் சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கவிதைகளை வாய்விட்டுப் படிக்கும்போது ஒரு திளைப்பு ஏற்படுகிறது. இதேபோல் 'விடிவு' எனும் தலைப்பிலுள்ள கவிதையிலும் ஐந்து வெவ்வேறான படிமங்களைக்கொண்டு ஒரு புலர்ச்சி சொல்லப்படுகிறது. இதுபோன்ற கவிதைகள், புதுக்கவிதை இயக்கமென நிலை பெற்ற சமயத்தில், மொழியின்பத்திற்காகக் கவிதை வாசிக்கும் பழக்கம் கொண்டவர்களைப் புதுக் கவிதையின்பால் ஈர்த்திருக்கும். தொடக்கத்தில் தூக்கலாக இருந்த இந்தப் படிமப் பிரயோகங்கள் பின்னர் அவருடைய கவிதைகளில் அங்கங்கே மிகவும் குறைவாக உபயோகிக்கப்பட்டுள்ளன.
நன்றி-காலச்சுவடு

எழுதியவர் : குவளைக் கண்ணன் (31-Aug-15, 10:14 pm)
சேர்த்தது : உமை
பார்வை : 1254

மேலே