தரித்திரம் போக்கும் தாய்

கோடரி கைத்தூக்கிக் கொண்டலை கின்றதால்
மூடராய் ஆகும் முயற்சிக்குச் – சீடராய்
ஆனதைச் சிந்திக்க ஆரண்யம் காக்கலாம்
போனதைச் சற்றே மறந்து.

வீடமைக்க வென்று,நீ வெட்டும் மரத்தாலே
காடழியும் ! அந்தக் கிளைகளிலே –கூடும்
அமைத்துக் குடியிருக்கும் காட்டுப் பறவை
தமையும் அழிப்பாய் தவிர்!-------

காயும் மரங்கள் கனல்பட்டுத் தீப்பிடித்து
மாயும் தருணம் மனிதமும் – ஓயும்.
உலகத்தை உண்டாக்க ஓர்நாளில் இந்த
நிலம்மட்டும் நிற்கும் நிலைத்து.

நீரின்றி மண்ணும் நிறம்மாறிப் போனாலோ
ஊரில்லை வாழ உயிரில்லை. – வேரில்லை
வேரூன்ற வித்தில்லை. வெய்யில் குடிக்காமல்
நீரூறக் கன்று நடு .

நதியாம் நரம்போடு நன்நீர்த் திரவ
உதிரம் வழங்கும் வனமே – புதுமைச்
சரித்திரம் என்றும் எழுதிஇம் மண்ணின்
தரித்திரம் போக்கிடும் தாய்!

மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (1-Sep-15, 2:18 am)
பார்வை : 158

மேலே