எப்போதும் இருக்கிறது என் ஆகாயம்

கண்களின் கதவுகளுக்கு அப்பால்
எப்போதும் இருக்கிறது...
ஒரு ஆகாயம்.

உறைந்த விண்மீனின்
ஒளி முள்ளை...
சிறகற்ற பறவைக் குஞ்சுகளாய்
என் கனவுகள் தாலாட்டுகின்றன.

இந்த நிமிடம்
உருவாக்கிய
இந்தக் கணத்தின்
நிலைக் கண்ணாடியில்...
பிம்ப அலைகளாய் விரிகிறது
கனவுகளின் உள்முகம்.

கசிந்து வீழும் தனிமையில்
கண்ணிமைகளுக்கிடையே
நினைவின் வாசனை
சிதறுகிறது.

இரவின் சுரங்கம்
கனவின் வரைபடமாகி
குழிந்து விரிகிறது
காலமாய்.

மௌனமாகும்
பகலின் இடைவெளிகளில்
இறுகும் மனம்...
ஆறுதல் தேடி இளகும்
கனவுகளில்.

உதிரத்தின்
சுவையோடும், நிறத்தோடும்,
வெப்பத்தோடும்
இருக்கும்
இந்தக் கனவிலிருந்து
நழுவ விரும்பாமல்...

வெண்ணையில் செய்த மலராக
விரிகிறது...

என் கண்களுக்கு அப்பால்
எப்போதும் இருக்கும்
என் ஆகாயம்.

எழுதியவர் : rameshalam (1-Sep-15, 6:32 pm)
பார்வை : 85

மேலே