கூட்டித்தள்ளப் படும் காலம்
நீண்ட அஸ்தமனம்.
இருள் மண்டிய வானம்.
சப்தமற்ற காற்று.
மஞ்சள் நிற மரங்கள்.
மறைந்து கிடக்கும்
கல் இருக்கைகள்.
வளைந்து செல்லும்
வீதியில் காலப்
பெரு வெள்ளம்
விட்டுச்சென்ற மீதிகள்..
கோடையும்
இலையுதிர் காலமும்
உரசிக் கொள்ளும்
இறுதி நாளொன்றில்
வீதி பெருக்குபவன்
கூட்டிப் பெருக்கும்
விளக்கு மாற்றை
ஏமாற்றிக்கொண்டே
இருக்கின்றன
உதிர்கின்ற இலைகள்.
இலையுதிர் காலம்
விரைந்து செல்லாதா..என
ஒவ்வோர் மரத்தினடியிலும்
நின்று அண்ணாந்து பார்க்கும்
அவன் ஏக்கப் பார்வைக்கும்
மரங்களின்
மௌனப் போராட்டத்திற்கும்
மத்தியில் மெதுவாகக்
கூட்டித்தள்ளப்
பட்டுக்கொண்டிருக்கிறது
ஒரு பருவ காலம்