வங்கியில் பணம் கட்டும் அனுபவம்

நேற்று ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியாவில் பணம் கட்ட வேண்டியிருந்தது. பேங்கிற்கு கடைசியாகச் சென்று இரு மாதங்கள் ஆகிவிட்டது. ( அங்கு என்ன வேலை?) டோக்கன் வாங்குவதற்காக அந்த இயந்திரத்தை தேடினேன் வழக்கமான இடத்தில் காணவில்லை. புதிதாக ஒரு இருக்கை அமைக்கப்பட்டு ஒரு இளம்யுவதி (ஆமாங்க சின்ன பாப்பாதான்) இப்போ டோக்கன் சிஸ்டம் இல்லை...சார்.... உங்களுக்கு என்ன வேண்டும்? பணம் கட்டணும்மா என்றேன்..... எவ்வளவு கட்டணும் ? -0,000 என்றேன். சார் சலான்ல கட்டறா இருந்தா 50,000க்கு மேல இருந்தாததான் சார் கட்ட முடியும், அதுக்கு கீழேன்னா வெளியே ஆடோமெடிக் டெபாசிட் மெஷின்லதான் கட்டணும்னார்.... சமீபமாத்தான் இது நடைமுறைக்கு வந்திருக்கு சார்... என்றார். வெளியே அவர் சொன்ன தானியங்கி பணம் செலுத்து இயந்திரத்தின் முன் பெரு வரிசை நின்றிருந்தது.

ஒவ்வொருவருக்கும் சராசரியாக 5 நிமிடமாவது ஆகின்றது. சாமான்ய மக்கள் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவதும் அவ்வளவு எளிதன்று. பணத்தை இயந்திரத்தில் இட்டு, ஏதாவது சிக்கிக் கொண்டாலோ தவறுதலாக எண்ணிவிட்டாலோ என்ன கதி என்ற பயம் எழமால் இல்லை. இந்த வசதியை வங்கி நேரம் முடிந்த பின்னர் தேவைப்படுபவர்களுக்கு பயன்படும் வண்ணம் மாற்றலாம். சலான் மூலமாக கட்டும் எளிய முறையை தொடர்ந்து அமல்படுத்தலாம். என்பதே என் கருத்து. வங்கிக்குள் அனைத்து சாளரங்களிலும் ஆட்களின்றி காலியாகவே இருந்தன. ஆமாம்....என்னைப் போன்ற எளிய மனிதர்கள் 50,000 க்கு மேல் கட்டுவதற்கு எங்கே போவார்கள்? மக்களின் இந்த அசௌகரியத்தை களைய அடுத்த முறையாவது தொடர் வேலை நிறுத்தம் செய்யும் , வீ..டிமாண்ட்...வீ...டிமாண்ட்....தோழர்கள் எமக்காக குரல் கொடுப்பீர்களா?

நான் எவ்வளவு கட்டினேன்னு புத்திசாலித்தனமா இந்நேரம் கணக்கு போட்டிருப்பீர்களே......என்ன இருந்தாலும் நீங்களும் என் இனம்தானே?

எழுதியவர் : செல்வமணி (From Facebook) (1-Sep-15, 10:49 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 127

மேலே