கற்பு
நாளைக்குள் விடியவில்லையெனில்
நரகத்துக்குப் போவேன்
ஏனெனில்-நான்
கற்பென்று சொல்லியே களவு செய்தவன்
ஏனெனில்-நான்
கட்டிய கணவனையே கொன்று போட்டவள்
புல்வெளிகாட்டின் பூகம்பத்திரை
மழைக்காலத்து மத்தாப்பு போல
மினுங்கி இறக்கிறது
சுவற்றுப் பாசன வாய்க்காலில்
செத்த பல்லிகள்
நுளம்புகளின் வருகைக்கு
நாநீட்டி கிடக்க .
செத்துச் சாகாமல் சிதறிய
சின்ன நுளம்புகள்
ஒருசேரக் கூடி
எமனுக்கு விண்ணப்பிக்கும்
பிரமனைக் கொல்லச் சொல்லி ...
வாசுகியின் பட்டத்தை தட்டிப் பறிக்க
வரிசையில் வந்து நின்றார்கள் வனிதையர்கள் ...
அவர்களில் அநேகம் பேர்
கனவிலும் மாற்றானைப் புணர்ந்து
நனவிலும் நாயானவர்கள்
அவளன்றி அசையாத
அவனின் பிரபஞ்சத் துரும்புகள்
இந்த கற்பு சாசனத்தை
உரக்கவே படித்தன .
ஒவ்வொரு ஆண்மகனின் பால்குறியிலும்
பரத்தையரின் பெண்ணணுக்கள் .
முகத்திரைகளுக்கு உள்ளிருக்கும்
மூக்கு விழிகள் கற்பு பேசட்டும்
அப்புறமாய் எழுதுவோம்
கற்பே காப்பு
கற்பே கோப்பு ..
அதுவரை-
கசடான வார்த்தை கற்பு
கலப்படங்கள் நிறைந்தது கற்பு
அசலே இல்லா ஆச்சரியம் கற்பு
ஆதாம் ஏவாள்அறியாததிந்த கற்பு.