கனவுகள் விற்பனைக்கு

பத்து நிமிட தூரத்தில்
புறநகர் புகைவண்டி நிலையம்..
நெடுஞ்சாலை கூப்பிடுதூரம்..
தகவல் தொழில்நுட்ப வளாகம்
பக்கத்தில் வரும் அடுத்த மாதம்....
பள்ளிகளும் கோயில்களும்
நடக்கின்ற தூரத்தில்...
உடனே வந்து விடும்
மாநகரக் குழாய்த் தண்ணீர்...
வளமாகி விடும் வாழ்வு...
முதல் போட்ட மறுவருடம்
மூன்று மடங்காகும் நிலத்தின் விலை..
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளுங்கள்
வண்ணக் கொடிகள் அசைந்தாட
சின்னத் திரை நடிகையின் அறிவுரை..

பணிஓய்வு பெற ஐந்து வருடம்..
கந்து வட்டிக்காரன் கடன்கொடுக்க
அப்பாவும் வாங்கினார்
பெருமையுடன் இரண்டு கிரௌண்டு ..
தொடர்ந்து வந்த பணிஓய்வும்
கல்லூரிச் செலவுகளும்
அக்காளின் திருமணமும்
விரட்டியது அப்பாவை
வீட்டுமனை பூமி விற்க ..

புறப்பட்டு போகிறார்
அனுதினமும் அப்பா..
நிழல்தரா ஒற்றைப்
பனைமரம் வரவேற்க
நட்டிருந்த கற்களும்
கருவேலம்புதருக்குள்
காணாமல் போயிருக்க
கானல்நீர் கண்ணில்பட
நெடுஞ்சாலை வரை
நடந்தே தேய்கிறது
அப்பாவின் செருப்பு...

எழுதியவர் : ஜி ராஜன் (2-Sep-15, 11:58 am)
பார்வை : 113

மேலே